பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

466


வெளிப்படுத்தி நடிப்பதும் சபையோரை மெய்சிலிர்க்க வைக்கும். திரையைக் கிழித்து யாமினி கவிஞனைப் பார்க்கிறாள். அவனும் அவளைப் பார்க்கிறான். கவிஞன் கண்ணிழந்தவன் அல்லன் என்பதை உணர்கிறாள் யாமினி. அவள் நோய் கொண்டவள் அல்லள் என்பதைக் கவிஞனும் அறிகிறான் . இருவர் கண்களும் சந்திக்கின்றன. கவிஞன் மீண்டும் பாடுகிறான்.

மின்னற் குலத்தில் விளைந்ததோ! வான்
வில்லின் குலத்தில் பிறந்ததோ!

கன்னல் தமிழ்க்கவி வானரின் உளக்
கற்பனையே உருப் பெற்றதோ!
பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ! ஒரு

பூங்கொடியோ மலர்க்கூட்டமோ!
என்னவியப்பிது! வானிலே-இருந்

திட்டத்தோர் மாமதி மங்கையாய்
என்னெதிரே வந்து வாய்த்ததோ-புவிக்கு
ஏதிது போலொரு தண்ணாெளி?

அடடா! என்ன அருமையான கவிதை! இதைப் போன்ற இலக்கிய நயஞ்செறிந்த நாடகங்களை இனிப் பார்க்கப் போகிறோமா என்றே ஏக்கமுண்டாகிறது.

பில்ஹனனில் யாமினியின் தந்தை மன்னன் மதனனாக நடித்தார் தம்பி பகவதி. மன்னன், யாமினி, பில்ஹணன் மூவரும் வாதிடும் கட்டம் சபையோரிடையே சொல்லுக்குச் சொல் கை தட்டலைப் பெற்றது. அவ்வளவு உணர்ச்சிகரமான உரையாடல்களை எழுதியிருந்தார் ஏ. எஸ். ஏ. சாமி.

பில்ஹனனில் நகைச்சுவைப் பகுதி நாங்கள் எதிர்பார்த்த தைவிடச் சிறப்பாக அமைந்தது. மெய்க்கவியாக டி. என். சிவதானு தோன்றிச் சபையோரை வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார்.

யாமினியின் கனவுக்காட்சிகள் திரைப்படக்காட்சிபோன்று மிக உயர்ந்த முறையில் அமைக்கப் பெற்றிருந்தன. துஷ்யந்தன் சகுந்தலை சந்திப்பு; ராமர் சீதை கன்னிமாடச் சந்திப்பு; அம்பிகாபதி அமராவதி காதல்; குலோத்துங்கன் கோபாவேசத்தோடு