பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

468


ஏறத்தாழ 11 மாதங்கள் ஈரோட்டில் நாடகங்கள் நடை பெற்றன. நாடக வளர்ச்சிக்குரிய வகையில் நாடகக் கலை அபிவிருத்தி மாநாடும் நடந்தது. சிவாஜி, காளமேகம், பில்ஹணன் ஆகிய மூன்று இலக்கியச் சிறப்பு வாய்ந்த புதிய நாடகங்கள் அரங்கேறின. அடுத்தபடியாகத் திருப்பூருக்குப் போகத் திட்டமிட்டோம். அதில் ஏதோ சிக்கல் ஏற்பட்டது. எனவே காரைக்குடி ஷண்முக விலாஸ் தியேட்டர் பேசி முடிவு செய்யப்பட்டது. ஈரோட்டில் 1944 ஏப்ரல் 1ஆம் தேதி சம்பூர்ண இராமாயணம் பட்டா பிஷேக நாடகமாக வைக்கப்பட்டது.

நாடகத்திற்கு முந்திய நாள் அதிர்ச்சி தரத்தக்க ஒரு செய்தி பரவலாகக் காதில் விழுந்தது. நாளை நடைபெறவிருக்கும் இராமாயணத்தை யாரோ மறியல் செய்யப்போகிறார்கள் என்று. நான் நம்பவில்லை. நன்கு விசாரித்தேன். செய்தி உண்மைதான் என்று தெரிந்தது. நாடக அரங்கின் நுழைவாயிலில் நின்று கொண்டு, “பகுத்தறிவுக்கு முரணான இந்தப் புராண இதிகாச நாடகங்களைப் பார்க்காதீர்கள்” என்று உள்ளே நுழைவோரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாக மறியல் நடத்தும் பெரியார் அவர்களின் தொண்டர்கள் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார்கள். காலமெல்லாம் நாங்கள் நடத்திய இராமாயணம், பாரதம், சிவ வீலா, கந்தலீலா, கிருஷ்ணலீலா, மயில்இராவணன் எல்லா நாடகங்களையும் பார்த்துவிட்டு, எங்களுக்குப் பாராட்டுகளும் நடத்திப் பெருமைப் படுத்திய பெரியார் அவர்கள் ஏணிப்படிச் செய்கிறார் என்பது புரியாமல் தவித்தோம்.

பெரியண்ணா இச்செய்தியை அறிந்ததும் நாடகத்தன்று காலை போலீஸ் பெரிய அதிகாரியைச் சந்தித்தார். பெரியார்.அவர்களின் தொண்டர்கள் மறியல் செய்வதைத் தாம் தடை செய்ய வில்லையென்றும், பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படாதவகையில் அமைதியாக மறியல் நடைபெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். போலீஸ் அதிகாரி தாம் வேண்டிய நடவடிக்கையெடுத்துக் கொண்டு அமைதி காப்பதாக வாக்களித்தார்.

எல்லோம் வருந்தினர்

நான் பெரியார் அவர்களைச்சந்திக்க முயன்றேன். அவர் அச்சகத்திலும் இல்லை; வீட்டிலும் இல்லை. எங்கு போய்ச் சந்திப்பது?