பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

470


வரவேற்புக் குழுவினரும், நகரப் பொதுமக்களும் பாராட்ட விரும்பினார். அதற்கு முன் கூட்டியே எங்கள் அனுமதியையும் பெற்றனார். ஈரோடு நகரப் பொது மக்கள் சார்பில் நகரசபைத் தலைவர்.திரு ஆர். கே. வேங்கடசாமிநாயக்கர் அவர்கள்.சிவதாணு வின் நாடகக்கலை ஆர்வத்தினையும் நகைச்சுவைத் திறனையும் பாராட்டி நகைச்சுவைச் செல்வன் என்ற சிறப்புப் பட்டம் பொறிக்கப் பெற்ற பொற்பதக்கத்தை வழங்கினார்.

அண்ணா தலையீட்டால் அமைதி நிலவியது

மறுநாள் விடிந்ததும் அறிஞர் அண்ணா அவர்கள் தலையீட்டினல் முன்னாள் இரவு மறியல் நடைபெறவில்லை என்பதை அறிந்தேன். நாடகக்கலை மாநாட்டன்று தலைவர் ஆர். கே. சண்முகம் அவர்களுக்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடை பெறாமல் தடுத்ததும் இப்போது இராமாயணம் நாடகத்தை மறியல் செய்ய இருந்தவர்களுக்கு அறிவுரை கூறித் தடுத்து நிறுத்தியதும் அறிஞர் அண்ணா அவர்களிடம் நான் வைத்திருந்த மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தின. அவருக்கு நன்றி கூறி நீண்ட கடிதம் எழுதினேன்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும் பெரியார் அவர்கள்மீது என்னை பொறுத்த வரையில் மனத்தாங்கல் எதுவும் இல்லை. ஏப்ரல் 20 ஆம் தேதி கொட்டகை முதலாளி கான்சாகிப் சேக்தாவுத் அவர்கள் கம்பெனிக்கு ஒரு பெரிய விருந்து நடத்தினார். நகரப்பிரமுகர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள். பெரியார் அவர்கள் வந்து கலந்துகொள்ளாதது எனக்குப் பெருங்குறையாக இருந்தது, இருந்தாலும் விருந்து முடிந்ததும் நான் மட்டும் பெரியார் அவர்கள் இல்லம் சென்று வழக்கம்போல் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டேன். மறுநாள் புறப்பட்டு காரைக்குடி வந்து சேர்ந்தோம்.