பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

475


கலைவாணர் வருகையும் கலையுணர்வும்

கந்தலீலா நாடகம் ஒருமாத காலம் தொடர்ந்து நடைபெற்றது. திடீரென்று ஒரு நாள் கலைவாணரும், ஏ. எஸ். ஏ. சாமியும் காரில் வந்து நான் தங்கியிருந்த தனி வீட்டின் முன் இறங்கினார்கள். நான் அவர்களை வரவேற்றேன். கலைவாணர் உள்ளே வந்து என்னோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். சாமி, பெரியண்ணாவைப் பார்த்து வரச்சென்றார். கே. ஆர். இராமசாமியைப்பற்றிக் கேட்டேன். “இராமசாமி இனி நாடகத்துக்கு வருவது சந்தேகம். திரைப்படத் துறையில் அவனுக்கு நல்ல சந்தர்ப்பம் இருக்கிறது” என்று கூறினார் கலைவாணர். முத்துக்குமாரசாமி நட்டுவனரை நான் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன், “ஓ! இவரைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்.” என்றார் கலைவாணர். நட்டுவனார் மிகுந்த ஆர்வத்தோடு ‘சிறிது அபிநயம் பார்க்கிறீர்களா?’ என்று சொல்லிவிட்டு கலைவாணரின் அனுமதிக்காகக் காத்திராமல் உட்கார்ந்த நிலையிலேயே பாடி அபிநயம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். கலைவாணர் அவரைத் தடுத்து நிறுத்தாமல் முழுதும் கேட்டார். பாட்டு முடிந்ததும் தன் சட்டைப் பையிலிருந்த 10 ரூபாய் நோட்டை யெடுத்து ‘மன்னிக்க வேண்டும்; இப்போது என் கையிலிருப்பது இதுதான்; கட்டாயம் நீங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்’ என்று நட்டுவனார் கையில் கொடுத்தார். நட்டுவனார் இயன்றவரையில் நோட்டை வாங்க மறுத்தார். கலைவாணர் விடவில்லை, “தங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நான் எவ்வளவோ செய்ய வேண்டும். தற்சமயம் இதை வாங்கிக் கொள்ளுங்கள். சென்னைக்கு வரும்போது அவசியம் என்னை வந்துபாருங்கள்” என்றார். கலைவாணரின் அந்த உணர்வைக் கண்டு என் மெய்சிலிர்த்தது. பின்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சென்றார் கலைவாணர். நாடகம் பார்க்க வருமாறு அழைத்தேன், “வேறு காரியமாக வந்தேன். இருந்தால் வருகிறேன்” என்று புறப்பட்டு விட்டார்.

சென்னைப்பயணம்

பில்ஹணன் நாடக நூலை அச்சிட விரும்பினோம். சென்னையில் அச்சிட வேண்டுமென்று ஆசைப்பட்டார் ஆசிரியர் சாமி. எங்கள் சார்பில் அதன் முழுப்பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொள்வதாக