பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மேதைகளின் விசித்திரப் பண்புகள்

காரைக்குடியில் இருந்தபோது புரட்சிக் கவினார் பாரதிதாசன் கானாடுகாத்தான் வந்திருப்பதாகச் செய்தி கிடைத்தது. கவிஞரை நேரில் காணவும் பில்ஹணன் சம்பந்தமான அனுமதியைப் பெறவும் எண்ணிக் கானடுகாத்தான் சென்றேன். எங்கள் நண்பர் திரு வை. சு. சண்முகம்செட்டியார் இல்லத்தில் இருப்பதாக அறிந்து அங்கு சென்றேன். செட்டியார் அவர்களைப் பார்த்தேன். செய்திகளை விபரமாகச் சொன்னேன், வை. சு. ச. அவர்கள் மகாகவி பாரதியோடு நெறுங்கி பழகியவர். கவினார்களோடு எச்சரிக்கையாகப் பழகவேண்டுமென்று எனக்குச் சில அறிவுரைகளையும் கூறினார். பாரதிதாசன் 10 நிமிடங்களுக்கு முன்புதான் பள்ளத்துரர் போயிருப்பதாகச் சொன்னார். பாரதியாரைப்பற்றி ஒரு விசித்திரமான செய்தியையும் அறிவித்தார்.

நூறு ரூபாய் கோட்டு

ஒருநாள் செட்டியார் இல்லத்திற்குப் பாரதியார் வந்து தங்கியிருந்தபோது, திடிரென்று “எனக்கு அவசரமாக ஒரு நூறு ரூபாய் வேண்டும்; கொடுப்பீரா?” என்றாராம் பாரதி. உடனே வை.சு.ச. “இதோ கொடுக்கிறேன்” என்று பெட்டியைத்திறந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து வந்து பாரதியிடம் கொடுத்தார். பாரதி நோட்டை இருபுறமும் திருப்பிப் பார்த்துவிட்டு, “இது எனக்குத் தானே?” என்றார்.

“ஏன்? என்ன சந்தேகம்?” என்றார் வை. சு. ச.

“இல்லை; எனக்குச் சொந்தமான இந்த நோட்டை நான் எப்படி வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ள எனக்கு உரிமை யுண்டல்லவா?” என்றார் பாரதி.