பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

487


சும்மா விடக்கூடாது. சட்டப்படி வழக்குத் தொடர வேண்டும்” என்றார்கள். உடனே கலைவாணர், “ஒரு பத்திரிகைக்காரன் கிளப்பிவிடும் புரளிகளால், காலமெல்லாம் நாம் செய்து வரும் கலைப்பணியை மக்கள் மதிக்கவில்லையென்றால் போகட்டுமே. அதனால் பொது மக்களுக்கு நஷ்டமே தவிர நமக்கொன்றும் நஷ்டம் இல்லை” என்றார். இப்படிச் சொல்லிய அப்பழுக்கற்ற கலைமேதையின் மீது அந்தப் பத்திரிகையாளரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டியது மிக மிகக் கொடுமையல்லவா? கலைவாணரும் பாகவதரும் சென்னை சிறைச்சாலையில் இருப்பதாக அறிந்து வருந்தினோம். இந்த வழக்கு சம்பந்தமான செய்திகளைப்பத்திரிகைகளில் பரபரப்போடும் கவலையோடும் படித்து வந்தோம். 28.4-45 இல் கலைவாணரைப் பார்க்க நான் சென்னை சென்றேன். அப்போது என். எஸ். கே. நாடக சபையின் முழுப் பொறுப்பையும் சகோதரர் எஸ்.வி. சகஸ்ரநாமம் ஏற்று நடத்தி வந்தார். அவரோடு தங்கினேன்.

களங்கமற்ற பசலை முகம்

முற்பகல் 11 மணியளவில் சகஸ்ரநாமத்தோடு சிறைச் சாலைக்குச் சென்றேன். நாங்கள் இருவரும் ஜெயில் சூப்பரின் டெண்டுடன் அமர்ந்திருந்தோம். கலைவாணரை உட்புறமிருந்து அழைத்து வந்தார்கள். அவர் வரும்போதே, “என்ன ஷண்முகம் எப்போ வந்தே? திருச்சியிலே வசூல் நல்லா ஆகுதா? அண்ணாச்சி யெல்லாம் செளக்யமா?” என்று கேட்டுக் கொண்டே எப்போதும் போல் கலகலப்போடு வந்தார்.

என் கண்களில் நீர் நிறைந்து விட்டது. பொங்கி வரும் அழு கையை அடக்க எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. அவ ருக்கு ஆறுதல் கூறவந்த நான் கலங்கி நிற்பதைக் கண்டு, எனக்கு அவர் ஆறுதல் கூறினார். “30ம் தேதி நம் கே. எம். முன்ஷியின் வாதம் முடிந்ததும் எனக்கு விடுதலை கிடைத்து விடும். எல்லோரையும் கேட்டதாகச் சொல்லு” என்றார். நாங்கள் இருந்த நேரம் வரையில் அவர்தான் உற்சாகத்தோடு பேசிக் கொண்டிருந்தாரே தவிர நான் பேசவே இல்லை. சிறிதும் களங்கமற்ற அந்தப் பசலை முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். கீழ்ப் பாக்கம் சென்று கலைவாணரின் துணைவி மதுரம் அம்மையாரைப் பார்த்து ஆறுதல் கூறினேன்.