பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

489


அன்று மாலையும் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியையும் டி. சதாசிவம் அவர்களையும் சந்தித்தோம். 19.5.45இல் திருச்சி யில் நடைபெறவிருக்கும் எங்கள் ஒளவையார் நாடகத்திற்குத் தலைமை தாங்கும்படி கேட்டுக்கொண்டேன். கல்கி மகிழ்வோடு ஒப்புக் கொண்டார். அதன்பின் சென்னையில் பல்வேறு நண்பர் களைச் சந்தித்தேன். நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் எங்களோடு மேனகாவில் நடித்த கே.டி. ருக்மணியைச் சந்திக் காமல் போவதில்லை. அவரையும் சென்று பார்த்து வந்தேன். அன்றிரவும் சகோதரர் சகஸ்ரநாமத்தோடு தங்கினேன்.

கே. எம். முன்வியின் வாதத்திறன்

30 ஆம் தேதி முற்பகல் உயர்நீதிமன்றம் சென்று இலட்சுமி காந்தன்கொலை வழக்கு விசாரணையைப் பார்த்தேன்.கலைவாணர் பாகவதர் இருவரையும் கைதிக்கூண்டிலே பார்த்தபோது என்னல் தாங்க முடியவில்லை, கைதிக் கூண்டிலேயே நாற்காலிகள் போட்டுக் கலைமணிகள் இருவரையும் சென்ட்ரல் ஸ்டுடியோ ஸ்ரீராமுலு நாயுடு அவர்களையும் உட்கார வைத்திருந்தார்கள். கே. எம். முன்ஷியின் திறமையான வாதம் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டிலிருப்பவர்களின் உள்ளத்தில் கோடி கோடி எண்ணங்கள். அல மோதிக் கொண்டிருக்குமல்லவா? அதுதானே இயல்பு! பாகவதர், நாயுடு இருவருக்கும் அப்படி இருந்திருக்கலாம். ஆனால், கலைவாணர் எதைப் பற்றியும் சிந்தித்ததாக எனக்குத் தோன்றவில்லை. அவர் உற்சாகத்தோடு பாகவதரின் முதுகைத்தட்டி நான் கோர்ட்டுக்கு வந்திருப்பதைச் சிரித்துக் கொண்டே சுட்டிக் காட்டினார் . துன்பத்தின் எல்லையிலும் இன்பத்தைக் காணும் இந்த உயரிய நிலை மேதைகளுக்கே உரிய விசித்திரப் பண்பல்லவா? அன்று மாலையே புறப்பட்டு மறுநாள் காலை திருச்சிக்கு வந்துசேர்ந்தேன்.

நான் திருச்சிக்கு வந்த நான்காம் நாள் காலைப் பத்திரிகைகளில் நெஞ்சந் திடுக்கிடும் செய்தி வந்திருந்தது. கலைவாணர், பாகவதர் இருவருக்கும் தீவாந்திர தண்டனை விதிக்கப்பட்டது என்ற துயரமிக்க செய்தி. இதனைப் படித்ததும் கம்பெனி நடிகர்கள் சிலர் அழுதார்கள். நானும் ஒர் அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்.