பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மு. கருணாநிதி
முதலமைச்சர்
தமிழக அரசு
தலைமைச் செயலகம்,
சென்னை-9

14-4-'72
முன்னுரை

‘எனது நாடக வாழ்க்கை’ என்ற தலைப்பில் முத்தமிழ்க் கலா வித்துவரத்தினம், ஒளவை திரு டி. கே. ஷண்முகம் எம். எல். சி. அவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகத் துறையில் தமக்கு ஏற்பட்ட அனுபவக் கனிகளைப் பிழிந்தெடுத்து, அந்த நறுஞ்சாற்றினை நாமனைவரும் பருகிடுமாறு அரியதோர் நூல் வடிவில் தமிழ் மக்களுக்கு இன்று வழங்கியுள்ளார்கள்.

மணிவிழா எடுத்திருக்கும் இந்த இனிய மகிழ்ச்சிகரமான நாளிலே நாடகத்துறையில் தொல்காப்பியர் எனத் தகும் எல்லா விதமான ஆற்றல்களும் நிரம்பிடப் பெற்ற அன்னார், எளிய சுவையான நடையிலும், கடந்த காலத்தைத் திரும்பிப்பார்த்தும், இக்கால இளைஞர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும், கருத்துத் தெளிவுக்கு மருந்தாகவும் இதனைப் படைத்துள்ளார்கள்.

நாடகத்துறையில் தோல்வி காணாது வெற்றிகள் பல ஈட்டியுள்ள அவர்கள், நல்ல தமிழ்ப் பற்றும் தமிழ்ச் சான்றாேர்கள்பால் நீங்காத பக்தியும் உடையவர்கள்; அரசியல் தலைவர்களிடத்திலும் நல்ல முறையிலான தொடர்பும் மதிப்பும் கொண்டுள்ளவர்கள் என்பதையெல்லாம் இந்நூல் நன்கு எடுத்துக் காட்டுகின்றது.

பொதுவாகத் தமிழ் மக்கள் அனைவரும் போற்றுதற் குரியது என்ற என் பணிவான கருத்தினைத் தெரிவித்துத் திரு டி. கே. எஸ் அவர்களின் அரிய முயற்சி வெல்க என வாழ்த்துகின்றேன். வணக்கம்.