பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

495


அந்தமான் கைதி நாடகம் எனக்கு நிரம்பவும் பிடிந்திருந்தது நாங்கள் நடத்த வேண்டுமென்று விரும்பிய கல்கியின் சுபத்திரையின் சகோதரன் கதைக் கருவை உள்ளடக்கியதாக நாடகம் அமைந்திருந்தது. நாடகம் சரியாக நடத்தப்பட்டால் மகத்தான வெற்றிபெறும் என்று கவினார் கு. சா. கி. அவர்களுக்கு நான் அப்போதே உறுதி கூறினேன்.

சிவாஜி நாடகத்தில் எஸ்.எஸ். இராஜேந்திரன் கதாநாயகன் ஜெய்வந்தாக மிகவும் நன்றாக நடித்ததால் அந்தமான் கைதியிலும் அவரே கதாநாயகன் பாலுவாக நடிக்கலாம் என்று நான் கூறினேன். “அப்படியானால் நீங்கள் எந்தப் பாத்திரத்தை ஏற்கப் போகிறீர்கள்?” என்றார் கு.சா. கி. “இந்த நாடகத்தில் நான் ஒய்வெடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்றேன். அவருக்குத் கொஞ்சம் வருத்தம். நான் நடிக்காவிட்டால் நாடகம் வெற்றி பெறுமா? என்பதில் அவருக்குச் சந்தேகம். “அப்படியானல், நடராஜன் பாத்திரத்தை நீங்கள் போடலாமே” என்றார் கவினார். என்னைவிடத் தம்பி பகவதி அந்த வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர். தங்களுக்குக் சிறிதும் கவலை வேண்டாம். நாடகத்தை வெற்றியோடு நடத்திய பிறகுதான் நான் ஒய்வெடுத்துக் கொள்ளப்போவேன் என்றேன்.

குண்டு கருப்பையா

எல்லோருக்கும் பாடம் கொடுக்கப் பெற்றது, நகைச்சுவை நடிகர் குண்டு கருப்பையா திருச்சியில்தான் எங்கள் குழுவிற்கு வந்துசேர்ந்தார். அவருடைய சரீரமே நகைச்சுவைக்கு வாய்ப்பாக இருந்ததால் புதிய நாடகத்தில் அவருக்கும் ஒருவேடம் கொடுக்க எண்ணினோம். அதேபோல் குட்டி நகைச்சுவை நடிகர்களில் அப்போது எங்கள் குழுவில் முதன்மையாக இருந்தவர் துவரங்குறிச்சி சுப்பையன். அவருக்கும் அந்தமான் கைதியில் ஒரு பாத்திரத்தைப் படைக்க முனைந்தோம். சமையல் கணபதி ஐயர் என்ற பாத்திரத்தை நகைச்சுவையோடு உருவாக்கிக் குண்டு கருப்பையாவுக்கும், திவான் பகதூரின் வேலையாள் வேடத்தை சுப்பையனுக்கும் கொடுத்தோம். இவ்விரண்டு வேடங்களும் நகைச்சுவை காட்சிகளுக்கு மேலும் மெருகூட்டவும், காட்சிகள் தாமதமின்றி நடைபெறவும் துணையாக அமைந்தன.