பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

502


எண்ணிப் பார்க்கிறான்.அப்போது அவன் மனத்தில் எண்ணுவதை மேகத்தில் காட்சி வடிவாகக் காட்டுவோம். அவன் தங்கை லீலாவும் பாலுவும் மணமாலை சூட்டிய தம்பதிகளாக மேகக் கூட்டத்தில் காட்சியளிப்பார்கள். முள்ளில் ரோஜாவில் அந்தச் சிறு மகிழ்ச்சிகூட இல்லை. கதாநாயகி செல்லம் தன் காதலன் இராமனாதனுக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதி அனுப்பிவிட்டு ஆற்றில் விழுந்து தற்கொலே செய்து கொள்கிறாள். அவள் கடிதத்தைப் படித்த இராமனாதன் அலறிக் கொண்டு ஓடுகிறான். ஆற்றுப் பாலத்தின் மீதிருந்து செல்லம் குதித்ததும் அவளைத் தொடர்ந்து ஒடி வந்த இராமனாதனும் ஆற்றில் குதிக்கிறான். அடுத்த காட்சியில் கைகோர்த்தபடி இருக்கும் இரு சடலங்களையும் கரையில் எடுத்து போட்ட நிலையில் உறவினரும் பொதுமக்களும் கண்ணிர் விட்டபடி நிற்கிறார்கள். “மலர்ந்த ரோஜா மலரே மடிந்தாயோ” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. அத்தோடு நாடகம் முடிகிறது.

முதல் நாள் நாடகம் முடிந்ததும் முள்ளில் ரோஜா நாடக முடிவினைப்பற்றி பொது மக்கள் தங்கள் கருத்தினை எழுதி யனுப்ப வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம். அதன்படி நூற்றுக்கணக்கான விமர்சனக் கடிதங்கள் வந்தன. சமுதாயத்தோடு போராடி வெற்றி பெறாமல் தற்கொலை செய்து கொள்வதாக நாடகத்தை முடித்திருப்பது சீர்திருத்தவாதிகளுக்கு உற்சாகம் அளிப்பதாக இல்லையென்றும், காதலர் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக நாடகத்தை முடிக்கவேண்டுமென்றும் சிலர் எழுதியிருந்தார்கள். இப்படிக் கருத்தறிவித்த கடிதங்கள் ஏறத்தாழ 50க்கு மேலிருந்தன. ரசிகர்கள் வேண்டுதலுக்கிணங்கத் துன்பியலிலேயே முடிந்த முள்ளில் ரோஜாவை இன்பியலிலேயே முடிப்பதாக விளம்பரம் செய்தோம். இரண்டாவது வாரமுதல் ஆற்றிலே விழப்போகும் செல்லத்தை இராமனதன் ஓடிவந்து காப்பாற்றுவதாகவும், அடுத்த காட்சியில் இருவருக்கும் திருமணம் நிகழ்வதாகவும் நாடகத்தை முடித்தோம். இந்த முடிவு ரசிகர்களின் உள்ளத்தில் அனுதாபத்தை உண்டாக்கவில்லை.

இன்பியலில் நாடகத்தை முடிக்க வேண்டுமென்று கடிதம் எழுதிய ரசிகர்களில் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் துன்