பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

508


வதாகப் படித்தது காலணு விலையுள்ள காந்தி பத்திரிகையில். திரு. வி. க., பெரியார் ஈ. வே. ரா. முதலியோரைப் பற்றி அவர் எழுதி வந்த குறிப்புகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அதன் பிறகு நான் மணிகொடி இலக்கிய ஏட்டின் தோழனானேன். வ. ரா. விடம் எனக்கு ஒரு தனி மதிப்பு. அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல். கோவையில் நடைபெற்ற தமிழ் மாகாண மாநாட்டுக்குச் சென்று, பாரதி பாடல்களைப் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அத்த மாநாட்டிலேதான் உடலுழைப்பில்லாத காங்கிரஸ் உறுப்பினார்கள் நூல்சந்தா கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் ராஜாஜி அவர்கள் அந்தத்தீர்மானத்தைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்த பொழுது, “அந்தத் தீர்மானந்தின் வாசகம் சரியில்லை. திருத்தம் வேண்டும்” என்று பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது. அதைத் தொடர்ந்து ஒர் உருவமும் எழுந்து நின்றது. உடனே ராஜாஜி, எழுந்து நின்ற அந்த உருவத்தை நோக்கி “ஸ்ரீமான் வ. ராமசாமி ஐயங்கார் வாசகத்தைச் சரியாகத் திருத்திக் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’. என்று கூறினார். அன்றுதான் வ. ரா. அவர்களை நான் முதன் முதலாகச் சந்தித்தேன். ‘ஐயங்கார்’ என்றதும் பட்டைநாமம் , பஞ்சகச்சம், இவைகலெல்லாம் என் கண்முன் நின்றன. பார்த்தேன்; உண்மையாகவே பிரமித்துப் போனேன். அருகிலிருந்த நண்பரிடம் வ. ரா. அவர்கள் ‘ஐயங்காரா?’ என்று கேட்டேன், “பூணூலைக்கூட வெகு நாட்களுக்கு முன்பே அறுத்தெறிந்து விட்ட புரட்சி வீரர்” என்றார் நண்பர். இதைக் கேட்டதும் வ. ரா. அவர்களிடம் நான் வைத்திருந்த அன்பும் மதிப்பும் பன் மடங்கு உயர்ந்தன. 1945இல் தான் நான் அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது. சில மணி நேரங்களே அவருடன் கழித்தேன். அது மறக்க முடியாத நாள். எனக்கேற்பட்டிருந்த மனத் தளர்ச்சி, உற்சாகக் குறைவு எல்லாம் எங்கேயோ ஒடி மறைந்துவிட்டன. வ. ரா. அவர்களின் எழுத்தில் நான் கண்ட அதிசயம் ஒன்று. புத்தகத்தைப் படிக்கிறோம் என்ற உணர்ச்சி மறைந்து, அவர் நம்முடன் பேசிக் கொண்டிருப்பது போலவே உணருவோம். மகாகவி பாரதியாரின் புகழைப் பரப்பியவர்களில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் வ. ரா. அவர்களே ஆவர்.