பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பில்ஹணன் திரைப் படம்

கோவை தியேட்டர் ராயல் புதிய நாடக அரங்கம். அது 15.4.46க்குள் கட்டி முடிந்து விடும் என்று எங்களுக்குச்சொல்லப் பட்டிருந்தது. 19ஆம் தேதி நாடகம் தொடங்கலாம் என்ற திட்டத்துடன் 4-4-46 இல் கோவை வந்து சேர்ந்தோம். சரியாக ஒன்றரை மாத காலம் தியேட்டருக்காகக் காத்திருக்க நேர்ந்தது. கம்பெனி வீடு நகருக்குள் கிடைக்கவில்லை. தியேட்டரிலிருந்து ஒன்றரை மைல்தொலைவில் இராமநாதபுரத்தில் தங்கியிருந்தோம் அதிக தூரம் என்றாலும் வீடு மிகவும் வசதியாக இருந்தது. அருகிலேயே பெண்களுக்குத் தனி வீடும் கிடைத்தது.

ஷண்முகா அரங்கம்

கோவை நகரப் பிரமுகர்கள் சிலருடன் சின்னண்ணா கலந்து ஆலோசித்தார். நாடகத்திற்காக ஒரு நல்ல அரங்கம் கோவையில் கட்டுவதற்குத் திட்டமிட்டார். பிரிமியர் சினிடோன் உரிமையாளர் திரு ஏ. என். மருதாசலம் செட்டியார், சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களின் மருமக்கள் திரு ஏ. சண்முகம் சகோதரர்கள், திரு டி. கே. சங்கரன் சகோதரர்கள், திரு. சி. எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்கள் மகன் திரு சதாசிவ முதலியார் ஆகியோர் பங்குதாரர்களாகச் சேர்ந்து கோவை மேட்டுப் பாளையம் சாலையில் தியேட்டருக்குத் தேவையான இடத்தை வாங்கினார். ஷண்முகம் கம்பெனி என்ற பெயருடன் ஒரு கூட்டுக் கம்பெனியை நிறுவினார். கட்டப்படும் நாடக அரங்குக்கு சண்முகா அரங்கு எனப் பெயர் வைப்பதாக ஒரு முகமாக முடிவு செய்யப் பெற்றது.

22. 4. 1946 இல் சண்முகா அரங்குக்கு அடிப்படைக் கல் காட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.