பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

515


ஷண்முகம் கம்பெனிக்கு முதல் நிர்வாக டைரக்டராக ஏ. என். மருதாசலம் செட்டியார் பொறுப்பேற்றார், அரங்க அமைப்பு வேலைகள் விரைவாக நடைபெறத் தொடங்கின.

தியேட்டர் ராயலில் சிவலீலா

10.5-46ஆம் தேதி தியேட்டர் ராயலில் சிவலீலா நாடகம் தொடங்கியது. நாங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமாக வசூலாயிற்று. திங்கட்கிழமை தோறும் விடுமுறை விடும் வழக்கத்தை மேற்கொண்டோம். தினசரி நாடகம் நடைபெறுவதிலிருந்து ஒருநாள் ஒய்வு கிடைத்தது நடிகர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் ஆறுதலாக இருந்தது. தியேட்டருக்குப் போகவும் வரவும் வசதியாக இருக்கும் பொருட்டு ஒரு பழய ‘வேன்’ வாங்கினோம். அதில் 20 பேர்வரை போகலாம். இரண்டு தடவைகளில் நடிகர்கள் எல்லோரையும் கொட்டகையில்கொண்டு சேர்ப்பதற்கு ‘வேன்’ மிகவும் செளகரியமாக இருந்தது.

பில்ஹணன் பட முயற்சி

வெற்றிகரமாக நடைபெற்று வந்த பில்ஹணன் நாடகத்தை வெள்ளித்திரையில் கொண்டுவரச் சின்னண்ணா விரும்பினார். புதுத் தியேட்டர் கட்டுவதற்குக் கூட்டுச் சேர்ந்திருந்த நிலையில் மேலும் படப்பிடிப்பில் பணத்தைச் செலவு செய்வது சிரமமாக இருக்கு மென்று பெரியண்ணா கருதினார். குமாஸ்தாவின் பெண் படத்தில் கூட்டு டைரக்டராகப் பணி புரிந்த திரு. கே. வி. சீனிவாசன் பில்ஹணனைத் தாமே தனியாக டைரக்ட் செய்ய விரும்பினார். அவரும் சின்னண்ணாவும் இதில் அதிக ஆர்வம் காட்டியதால் அந்த ஆர்வத்தைத் தடை செய்ய பெரியண்ணா விரும்பவில்லை. சேலம் சண்முகா பிலிம்ஸ் கூட்டுறவோடு பில்ஹணனச் சென்ட்ரல் ஸ்டியோவில் ஆறு மாத காலத்திற்குள் எடுத்து முடித்து விடலாம் என்று டைரக்டர் கே. வி. சீனிவாசன் உறுதி கூறினார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. நாடகக் குழுவின் நடிக-நடிகையரைக் கொண்டே பில்ஹணனைப் படமெடுக்க முடிவு செய்யப் பட்டது. சேலம் ஷண்முகா பிலிம்ஸ் திரு கந்தசாமி செட்டியாருடன் கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.