பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

527


முடிக்கலாமென்று எண்ணினோம். பல்வேறு தகராறுகளால் ஏறத்தாழ ஒராண்டாகியும் படம் முடியவில்லை. இந்தநிலையில் தோழர் ஜீவா கேட்ட தொகையைக் கொடுத்து உதவுவது எங்கள் சக்திக்கு மீறிய ஒன்றாகத் தோன்றியது. இதுபற்றிப் பெரியண்ணாவும் நானும் கலந்து யோசித்தோம். தோழர் ஜீவாவின் லட்சியத்திலும் அயராத உழைப்பிலும் பெரியண்ணாவுக்கு அபார நம்பிக்கை இருந்தது. ஆழ்ந்து சிந்தித்த பிறகு எப்படியும் அவர் கேட்கும் தொகையைக் கொடுத்து உதவ உறுதி கொண்டார். மறுநாள் தோழர் ஜீவானந்தத்திடம் ரூ. 5000/-ரொக்கமாகவே கொடுக்கப் பெற்றது. முறைப்படி அதற்காக கடன் பத்திரமோ ரசீதோ எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.

சென்னை சென்ற ஜீவா நன்றிக்கடிதம் எழுதினார். ஒருவார காலத்திற்குள் கம்யூனிஸ்டுகள் பலர் கைது செய்யப்பட்டதாகவும் தோழர் ஜீவானந்தம் தலைமறைவாகிவிட்டதாகவும் அறிந்தோம். எங்கள் பணத்திற்காக நாங்கள் கவலைப்படவில்லை. தோழர் ஜீவாவைச் சந்திக்கும் வாய்ப்பினை இழந்தமைக்காகவருந்தினோம்.

ஷண்முகா தியேட்டர் திறப்புவிழா

கோவையில் கட்டப்பெற்று வந்த ஷண்முகா அரங்கம்கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும் திறப்புவிழா நடைபெறப் போவதாகவும் அழைப்பு வந்தது. சின்னண்ணா மட்டும் விழாவில் கலந்துகொண்டார். 25. 10. 47இல் திவான் பகதூர் சி. எஸ். இரத்தின சபாபதிமுதலியார் அவர்களால் கோவை ஷண்முகா அரங்கு திறந்து வைக்கப் பெற்றது. எங்களையும் பங்குதாரர் களாகக்கொண்டு கட்டப்பட்ட நாடக அரங்கு ஆதலால் தியேட்டர் வாடகை கொஞ்சம் சாதகமாக இருக்குமென்று எதிர் பார்த்தோம். ஆனால்ஒரு மாதத்திற்கு முன்பே வாடகையை நிர்ணயம் செய்வதில் தகராறு வந்துவிட்டது. வாடகை அதிக மாகக் கொடுக்கவேண்டுமென்ற நிலையேற்பட்டதும் பெரியண்ணா சொந்தத் தியேட்டரில் நாம் நாடகம் நடத்தத்தான் வேண்டுமா என்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். பெரியண்ணாவின் கோபம் நியாயமானது என்பதைப் பங்குதாரர்கள் உணர்ந் தார்கள். அதன்பின் கோவை ஷண்முகா அரங்கில் நாடகம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. கோவைக்குப்பயணமானோம்.