பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

534


‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’ என்ற தலைப்பைப் படித்ததும் என் மனம் வருந்தியது. ஒரு காங்கிரஸ் நாளிதழ் மற்றொரு காங்கிரஸ் ஊழியர் தோல்வி அடைந்ததை இவ்வாறு நையாண்டி செய்திருந்தது எனக்கு வியப்பாகவே இருந்தது.

பக்தவத்சலனார் தீர்மானம்

1948 ஜனவரி 18,19இல் தமிழ் மாகாண அரசியல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அம்மாநாட்டில் நானும் கலந்து கொண்டு துவக்கத்தில் பாடல்கள் பாடினேன். இரண்டாம் நாள் மேடையில் அன்றைய முதல் அமைச்சர் திரு ஓமந்துTர் ராமசாமி ரெட்டியார் அவர்களும், அன்றையத் தமிழ்நாடு காங்கிரஸ் தலை வரும், மாநாட்டின் தலைவருமாகிய திரு காமராஜ் அவர்களும் திரு ஜி. டி. நாயுடு போன்ற உள்ளுர்ப் பிரமுகர்களும், ஏனைய அமைச்சர்கள் சிலரும், திரு ம. பொ. சி. அவர்களும் வீற்றிருந்தார்கள். நானும் மேடையில் அமர்ந்திருந்தேன். மாநாட்டிலே அமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

இந்தியாவில் மொழி வழிப்பட்ட மாகாணங்கள் அமையும் போது தமிழர் பெருவாரியாகவாழும் தொடர்ந்தாற்போலுள்ள பகுதிகளைக்கொண்ட தனி மாகாணம் அமைக்க வேண்டும் என்று அத்தீர்மானம் கூறியது. இது திரு ம, பொ. சி. அவர்களையும் அவரை ஆதரித்தகாங்கிரஸ் காரர்களையும் திருப்திப் படுத்துவதற். காகவே கொண்டுவந்த தீர்மானம். ஆனால் தீர்மானம் மொழி வழி மாகாணங்கள் அமைக்க வேண்டுமென்று உறுதியாகச் சொல்லாமல் அமையும்போது என்று சொல்லப்பட்டது குறித்து திரும, போ.சி. அதிருப்தியடைந்தார். அவர் எழுந்து தம்முடைய கருத்தை அறிவித்தார். அத்தோடு, வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரி முனையும் உள்ள தமிழ்நாடு வேண்டும் என்ற திருத்தத்தைப் பிரேரபித்தார். ஆம்; பின்னல் நடைபெற்ற வட எல்லைப் போராட்டத்திற்கு அன்றே ம. பொ. சி. வித்திட்டா ரென்றே நினைக்கிறேன். மாநாட்டுத் தலைவர் திரு காமராஜ், திரு. ம. பொ. சி. அவர்களின் திருத்தலத்தில் வேங்கடம், குமரிமுனை ஆகிய எல்லைகளைப்பற்றிய பகுதியை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தார்.