பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

536


கொள்ளும் நிலையில் இருந்தது. பலாத்காரத்தில் இறங்கிவிடும் அறிகுறிகள் தென்பட்டன. இது கண்ட ம. பொ. சி. மீண்டும் ஒலிபெருக்கி அருகில் வந்து நின்று “தமிழ்ப் பெரு மக்களே! நான் காங்கிரஸ்காரன். அதன் கட்டுப்பாட்டை விரும்புகின்ற ஒரு படைவீரன். நான் தலைவரின் நிராகரிப்பை ஏற்கவில்லையென்றா லும்,அதனைத்தொடர்ந்து எதிர்ப்பதன்மூலம் இந்தமாநாடு குழப்பத்தில் கலைவதை விரும்பவில்லை. என்ன ஆதரிக்கும் அன்பர்கள் இப்போது என் வேண்டுகோளை ஏற்று, அமைதி காக்குமாறு வேண்டுகிறேன். தலைவர் விருப்பம்போல் நடத்திக்கொள்ளலாம்” என்று கெம்பீரமாகக் கூறிவிட்டுத் தம் இடத்தில் வந்தமர்ந்தார். மேடையிலிருந்த பலரும் அவரைப் பாராட்டினார். தலைவர் காமராஜ் அவர்களும் கட்டுப்பாடுகாத்த ம.பொ. சி அவர்களைப் பாராட்டினார். அந்த நிலையில் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த அந்த ஒரு தீர்மானத்திற்கு மட்டும் மறுநாள் காலை ஷண்முகா தியேட்டரில் மாநாட்டைக் கூட்டி அதன் மீது ஒட்டெடுத்து முடிவு கூறப் போவதாகக் காமராஜ் அறிவித்தார். ஆனால் அப்படி ஒரு மாநாடு நடைபெறவே இல்லை.

அன்று ம. பொ.சி. அவர்கள்காட்டிய உறுதியும்,கொள்கைப் பற்றும், நாட்டுப் பற்றும் எனக்கு அவர்பால் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தின. மறுநாள் ஜி. டி. நாயுடு அவர்கள் இல்லத் திற்கு நாங்கள் சென்றிருந்தபோது, “நீங்கள் ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டு அஞ்சா நெஞ்சுடன் சிங்கம்போல் நின்ற நிலையைக் கண்டு நான் உங்களைக் காதலித்து விட்டேன்” என்று கூறினார் நாயுடு.

திரு ம.பொ.சி.க்கு நிதி திரட்ட வேண்டுமென்று 1948இல் திரு சின்ன அண்ணாமலை முயற்சி செய்தார். கோவை தேசபக்தர் திரு சுப்ரி மூலம் 500 ரூபாய்கள் நிதி திரட்டியதாகநினைவு.இதைக் குறித்து திரு ம. பொ. சி. எனக்குக் கடிதம் எழுதினார். “இது என் அனுமதியில்லாமல் நடைபெறுகின்றது. இந்த முயற்சியை நான் விரும்பவில்லை” என்று அறிவித்திருந்தார். இதன் பிறகு திதி திரட்டும் முயற்சி கைவிடப்பட்டது. அப்போது ம. பொ. சி. அவர்களின் ஐம்பதாண்டு நிறைவுநாளில் நானே வரவேற்புக் கழகத் தலைவராயிருந்து நிதி திரட்டிக் கொடுத்துக் கெளரவிக்க வாய்ப்பு ஏற்படுமென்று சிறிதும் எண்ணவே இல்லை.