பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதல் திருமணம்

என் முதல் மனைவி மீனாட்சி ஈரோட்டில் காசநோயால் காலமானாள்; அவள் என்னை விட்டுப் பிரிந்தபின் நாடகத் தயாரிப்பிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியதால் திருமணத்தைப் பற்றி நான் சிந்திக்கவேயில்லை. அக்கா, நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அடிக்கடி வற்புறுத்தி வந்தார். திருச்சியிலிருந்து பெரியண்ணா அவர்கள் நாகர்கோவில் சென்று ஒய்வெடுத்துக் கொண்டசமயம், எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் நான் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், என்னுடைய ஒப்புதலைத் தெரிவித்தால் உடனே பெண் பார்த்துத் தாம் ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்குநான் பதிலெழுதியிருந்தேன். திருமணத்திற்கு இப்போது அவசரமில்லையென்றும் நானே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துச் சொல்வதாகவும், அப்போது திருமணம் முடித்துக் கொள்ளலாமென்றும் அதில் தெரிவித்திருந்தேன்; உண்மையில் எந்தப் பெண்ணையும் மணந்து கொள்ளும் எண்ணம் அப்போது எனக்கில்லை.

திருமணம் சுவர்க்கத்தில் உறுதி செய்யப்படுகிறது

திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனால், எனது இரண்டாவது திருமணம் நடைபெற்றதை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன். அப்படித்தான் இருக்குமோவென்ற சிறு நம்பிக்கை இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் உதயமாகிறது. 1947இல் கம்பெனி திண்டுக்கல்லில் இருந்த போது ஒருநாள் பில்ஹணன் காதல் காவியத்தை நடித்து விட்டு இல்லத்திற்குத் திரும்பினேன், அன்றுதான் மீண்டும் திருமணம்