பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மனிதன்

பாலக்காடு வாரியர் ஹாலில் மனுஷ்யன் என்ற ஒரு மளையாள நாடகத்தைக்காணும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டதைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அதன் பின் சில நாட்களில் தமிழ் வித்துவானும் மலையாள மொழியிலே நன்கு பயிற்சி பெற்ற வருமான திரு பா. ஆதிமூலனார் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது மனிதன் நாடகத்தைத் தமிழில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தேன். அவர் தாமே மலையாள நாடகாசிரியர் முதுகுளம் ராகவன் பிள்ளையைச் சந்தித்து, நாடகத்தின் உரிமையை வாங்கித் தமிழில் எழுதித்தருவதாக வாக்களித்தார். கோவை முகாமில் மனிதன் நாடகம் எங்கள் கையில் கிடைத்தது. திரு பா. ஆதிமூலஞரோடு திரு கா.சோமசுந்தரம் அவர்களும் வந்திருந்தார். இவர் ஏற்கனவே வைரம்செட்டியார் கம்பெனிக்கு எதிர்பார்த்தது என்னும் நாடகத்தை எழுதிக் கொடுத்தவர். சோமசுந்தரம் ஆதிமூலஞரின் மாணவர். ஆசிரியரும் மாணவரும் சேர்ந்தே மனிதனை உருவாக்கியிருப்பதாக அறிந்தோம்.

மனிதன் மனுஷ்யனின் தழுவல்

மனிதன் மனுஷ்யனின் மொழி பெயர்ப்பு அன்று; தழுவல் என்றே சொல்ல வேண்டும். ஆம்; கருத்து ஒன்றைத்தவிர நாடக அமைப்புகள் முழுவதும் தமிழ் ஆசிரியர்களால் உருவாக்கப் பட்டவையே. மலையாள மனுஷ்யன் நாடகத்திலே இருந்த, குறைபாடுகளையெல்லாம் போக்கி, கதையின் கருத்தைத் தெளிவு படுத்தும் முறையில் புதிய உத்திகள் சிலவற்றைச் சேர்த்து, தமிழ் மனிதனை மிக உயர்வாகப் படைத்திருந்தார்கள் ஆசிரியரும், மாணவரும். நாடகத்தின் கருப்பொருள் எங்கள் உள்ளத்தைக்