பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

558

கவர்ந்தது. இதனை வெற்றிகரமாகத் தயாரிப்பதற்குரிய வழி வகைகளை ஆராய்ந்தோம்.

காட்சிகள் ஓரளவுக்குத் தாயாரிக்கப்பட்டன. எல்லோருக்கும் பாடம் கொடுக்கப்பெற்றது. மனிதன் என்ற பெயருக்குரிய டாக்டர் சுகுமாரனாக தம்பி பகவதியும், ஒவியன் ராஜனாக நானும், டாக்டரின் மனைவி சாவித்திரியாக எம். எஸ். திரெளபதியும், ஓவியனின் தங்கை சரசாவாக எம். கருப்பையாவும், டாக்டரின் சிற்றன்னை பிரேமாவாக கே. ஆர். சீதாராமனும், பிரண்டாக (பிரண்டு) ராமசாமியும், டாக்டரின் தந்தையாக டி. என். சிவதாணுவும் பாத்திரங்களை ஏற்றார்கள்.

உருண்டோடும் மனிதன்

மின்சார நிபுணர் விஸ்வேஸ்வரன் இமயத்தில் நாம் ஆரம்பத்தில் தமிழ்க் கொடியை இமயத்தில் பறக்கவிட்டுக் காட்டியது போல் மனிதனிலும் ஒரு புதுமையைச் செய்தார். மதமிலான் - மானியான் - உத்தமன் - மன்னிப்பான் என்ற எழுத்துக்களை தனித்தனியே பெட்டிகளாக செய்து, பல்புகள் போட்டு, சிவப்புக் காகிதங்கள் ஒட்டி ம-னி-த-ன் என்ற ஒவ்வொரு எழுத்தும் தலைகீழாக உருண்டோடுவது போல் காட்டி, இறுதியாக, மனிதன் என்ற எழுத்துகள் நிலைத்து நிற்பதுபோல் மிக அருமையாக செய்திருந்தார்.

5-8-48இல் மனிதன் நாடகம் மிகச்சிறப்பாக அரங்கேறியது. அன்று கோவை நகரசபைத் தலைவர் டாக்டர் நச்சப்பா தலைமை வகித்தார். அன்றைய வசூல் ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கருப்பையா பெண் வேடம்!

சரசுவாக நடித்த எம். கருப்பையாவும், பிரேமாவாக நடித்த கே. ஆர். சீதாராமனும் மிக அற்புதமாக நடித்தார்கள். சீதாராமனும் பெண் வேடத்தில் இளமையிலிருந்தே அனுபவம் பெற்றவர். எம். கருப்பையாவின் நடிப்புத்திறமையை