பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

559


பற்றித் தான் எல்லோரும் வியந்தோம். பல்வெறு உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க வேண்டிய பாத்திரம் சரசு. இந்தப் பாத்திரத்தைத் திறமையாக நடித்து எல்லோருடைய பாராட்டுதலையும் பெற்றார் கருப்பையா. பிரண்டு ராமசாமியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவருக்குப் பிரண்டு என்ற அடை மொழி வந்ததே மனிதன் நாடகத்தின் மூலம்தான். இவருடைய நடிப்பின் சிறப்பினைப் பற்றியும் மனிதன் நாடகத்தின் மகத்தான வெற்றியைப் பற்றியும் இரண்டாவது பாகத்தில்சொல்ல எண்ணி விருக்கிறேன்.

நாடகத்திற்கான பாடல்களையும் வித்துவான் பா. ஆதி மூலனார் எழுதியிருந்தார். மனிதன் நாடகம் ஒழுக்கத்தை வலியுறுத்தும் உன்னதமான நாடகமாக விளங்கியது.

தமிழ் முரசுக்கு உதவி நாடகம்

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்கள் நடத்தி வந்த தமிழ் முரசு என்னும் திங்கள் இதழின் நிதிக்காக 9-6-48இல் வித்தியா சாகரர் நாடகம் நடைபெற்றது. இந்நாடகம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ம. பொ, சி. அவர்கள் கோவைக்கு வந்திருந்தார். நானும் தலைவருமாகச் சில நண்பர்களிடம் சென்று நாடகத்திற்கென்று நிதியும் திரட்டினோம். ஆக, நடைபெற்ற வித்தியாசாகரர் நாடகத்திற்கு தியேட்டர் வசூல் நிதி வசூல் எல்லாமாகச் சேர்த்து ரூ. 3000 வசூலாயிற்று. இத் தொகையை தலைவரிடம் கொடுத்து தமிழ் முரசுக்கு வாழ்த்துக் கூறினோம்.

15-8-48 வரை மனிதன் நாடகம் தொடர்ந்து நடை பெற்றது. சின்னண்ணா சென்னைக்குச் சென்று ஒற்றை வாடைத் தியேட்டரைப் பேசி முன் பணமும் கொடுத்து வந்து விட்டபடியால் மனிதன் நாடகத்திற்கு நல்ல வசூலாகியும், மேற்கொண்டு நடத்த முடியவில்லை.

16- 8- 48 இல் மனோகராவைப் பட்டாபிஷேகமாக நடத்திக் கோவை நாடகத்தை முடித்துக் கொண்டோம்.