பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


நாடகம் இரவு பத்து மணிக்கு ஆரம்பம் என்று சொன்னார்கள். இரவு 7.30 மணிக்கு நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று காது செவிடு படும்படியாக ஒரு பெரிய வேட்டுச் சத்தம் கேட்டது ஊரே அதிர்ந்து விடும் போல இருந்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும் எல்லோரும் பயத்துடன் நான்கு புறமும் பார்த்தோம். உடனே சங்கரதாஸ் சுவாமிகள்,“ டேய்! ஒன்றுமில்லை. நாடக விளம்பரத்திற்காக வேட்டுப் போடுகிறார்கள்” என்றார், அப்போதுதான் எங்களுக்கு விஷயம் புரிந்தது.

அந்த ஊரில் கொட்டகை வாசலில் வேட்டுப் போடுவதற்காக ஒர் இடம் அமைக்கப்பட்டிருந்ததைப் போகும்போது பார்த்தோம், இரவு 7.30 மணிக்குமேல் மூன்று முறை வேட்டுப் போடுவார்களாம். அந்த ஊரிலும், சுற்றுப்புறத்தில் சுமார் ஏழு எட்டு மைல் தூரத்தில் உள்ள சிற்றுார் மக்கள் இந்த வேட்டுச் சத்தத்தைக் கேட்டுவிட்டு, மல்லாங்கிணறு கூத்து மேடையில் நாடகம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வார்களாம். எவ்வளவு எளிமையான விளம்பர முறை பார்த்தீர்களா?

வெளிச்சம் போடும் முறை

இரவு 8.30 மணிக்கு எல்லோரும் கொட்டகைக்குப் போய்ச் சேர்ந்தோம். அப்போதெல்லாம் மதுரையிலேயே கூட மின்சார விளக்கு கிடையாது. ஆக மொத்தம் நான்கு கியாஸ் லைட்டுகள் தாம் கொட்டகை முழுதும் வெளிச்சம் கொடுக்க வேண்டும். பிரதான வாயிலில் ஒன்று; மேடையுள்ளே வேடம் புனையும் இடத்தில் ஒன்று, மேடையின் இருபுறமும் இரண்டு கியாஸ் லேட்டுகள் மேலே கட்டித் தொங்கவிடப்பெற்றிருக்கும். கொஞ்சம் பெரிய நகரமாய் இருந்தால் இன்னும் இரண்டு கியாஸ் லைட்டுகள் வரும். சபை நடுவில் ஒன்று; மேடை நடுவில் ஒன்று. மல்லாங் கிணறு சிற்றுாரானதால் நான்கு லேட்டுகள்தாம் இருந்தன. இந்த வெளிச்சத்தில் எப்படி நாடகம் பார்த்தார்கள் என்பதை இன்று எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. நம் கண்களுக்கு இன்னும் நுண்ணிய பார்வை இருந்திருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன். மின்சார வெளிச்சம் வந்த பின் கண் பார்வைக்கிருந்த வலிமை