பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அணிந்துரை

சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம் எம். எல். சி. அவர்கள்

‘எனது நாடக வாழ்க்கை’ எனும் பெயரில் அவ்வை தி. க. சண்முகம் எழுதி வானதி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள இந்நூல் தமிழ் இலக்கியக் களஞ்சியத்துக்குப் புதிய வரவு எனலாம். ஆம்; நாடக நடிகர் எவரும் இதுவரை தனது நாடகவாழ்க்கையை ஒரு நூலாக உருவாக்கித் தந்ததில்லை. கலைஞர் சண்முகம் போற்றி வரும் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார், “நான் கண்ட நாடகக் கலைஞர்கள்” எனும் பெயரில் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை நான் படித்தும் இருக்கிறேன். ஆனால், அது முதலியாரின் நாடக வாழ்க்கையன்று. நாடக உலகில் தாம் சந்தித்த சில நடிகர்களைப் பற்றிய குறிப்புக்களையே அவர் அந்நூலில் தந்துள்ளார்.

கலைஞர் சண்முகம், “எனது நாடக வாழ்க்கை” என்று இந்நூலுக்குப் பெயரிட்டிருப்பினும், கடந்துபோன அரை நூற்றாண்டு காலத்தில் தமிழ்நாடகம் வளர்ந்து வந்த வரலாற்றையும் விரிவாகக் கூறியுள்ளார்.

ஐந்தாண்டு பிள்ளைப்பருவத்தில் இந்நூலாசிரியர் நாடக மேடையில் தோன்றினார். அறுபதாண்டு நிறைவு பெற்று, தமக்கு மணிவிழா நடைபெறும் இந்நாளிலே, தமது 55 ஆண்டு கால நாடக வாழ்க்கையை விரித்தெழுதும் பேற்றினைப் பெற்றிருக்கிறார் என்றால், இதனைத் தமிழ் நாடகம் செய்த தவம் என்றே சொல்ல வேண்டும்.

நடிகரெல்லாம் ஆற்றல் மிக்க எழுத்தாளராகி விடுவதில்லை. அப்படியே ஆற்றல் மிக்க எழுத்தாளரெல்லாம் புகழ் மணக்கும் நடிகராகி விடுவதில்லை. இந்த இரண்டு ஆற்றல்களும் அவ்வை சண்முகனாரிடம் நிறைவு பெற்று விளங்குகிறது என்பதற்கு இந்நூல் சான்றாகும்.