பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5


கடந்த காலத்தில் நாடக அரங்கில் தோன்றிப் புகழோடு விளங்கிய பலர் காலப்போக்கிலே மக்கள் கவனத்திலிருந்து மறைந்தே போயினர். ஆம்; மக்கள் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றத்தக்க பெருமைக்குரிய நடிக-நடிகையர்கூட இன்றையத் தலைமுறையினரின் நினைவுக்கு அப்பாற்பட்டவராகி விட்டனர். அவர்களை எல்லாம் இந்நூலில் நல்லவிதத்தில் அறிமுகப்படுத்தி, அவர்களுடைய பெயர்கள் மறைந்து போகாதபடி செய்துவிட்டார் ஆசிரியர் சண்முகனார். பொறாமையற்ற பண்பாளர்களுக்கே இது சாத்தியமாகும். கலைஞர் சண்முகம் தம்மிலே நாடக உலகை அடக்கிவிடாமல் நாடக உலகில் தம்மை ஒரு அங்கமாகக் கருதக்கூடிய உயர்குணம் படைத்தவர். அதனால் தமது வாழ்க்கையை மையமாகக் கொண்டு தமிழ் நாடக உலகின் அரை நூற்றாண்டு காலச் சரித்திரமாக இந்நூலைப் படைத்துள்ளார்.

ஒருவருடைய சுய சரிதம் எப்படி எழுதப்பட வேண்டுமோ, அப்படி எழுதப்பட்டுள்ளது இந்நூல். பல இடங்களில் நாடகக் காட்சிகளைப்பற்றிப் படிக்கிறோம் என்பதனை மறந்து, அந்தக் காட்சிகளைப் பார்க்கிறோம் என்ற உணர்வையே பெற்றுவிடுகிறோம்.

நாடக மேடையிலே நடிகர்களுக்கு விபத்துக்கள்கூட ஏற்படுவதுண்டு. இதனை, தாம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு படிப்பவருடைய மனம் உருகும்படி எழுதியுள்ளார். ஒரு காட்சியிலே கலைஞருக்கு ஏற்படவிருந்த விபத்திலிருந்து அவர் தெய்வாதீனமாகத் தப்பியதனை நாம் படிக்கும்போது, மணிவிழாக் காண வேண்டிய நம் சண்முகனார் விபத்திலிருந்து தப்பியது குறித்து நாம் வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறோம். இந்த ஒரு நிகழ்ச்சியை சான்றாகக் கொண்டு, நாடக உலகுக்கு ரசிகர் உலகம் எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறது என்பதனை நன்றியறிதலோடு உணர்கிறோம்.

கலைஞர் சண்முகம் நகைச்சுவை ததும்ப எழுதுவதில் தமக்குள்ள ஆற்றலை இந்நூலில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தி, யுள்ளார். நகைச்சுவை ததும்பப் பேசுவது வேறு; எழுதுவது வேறு. நகைச்சுவை ததும்பப் பேசும் ஆற்றல்பெற்றவரைப்போல் அதே முறையில் எழுதுகின்ற ஆற்றலைப் பெற்றவர் கலைஞர் சண்முகம். சில நடிகர்களைப் பற்றி நகைச்சுவையோடு குறிப்பிடும் போது பலமுறை என்னையறியாமலே நான் சிரித்ததுண்டு.

சின்னஞ்சிறு பிள்ளைகளைக் கொண்ட “பாய்ஸ் கம்பெனி” எதுவும் இந்நாளில் இல்லை. அதனால் நாடக உலகில் பிள்ளைகள் பட்ட அல்லல்களை இந்நூலின் வாயிலாகவன்றி வேறு வகையில் தெரிந்துகொள்ள வருங்காலத் தலைமுறையினருக்கு வாய்ப்பில்லை.