பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


கொண்டார். சுவாமிகளுக்குத் தேவையான சகல வசதிகளையும் தனிப்பட்ட முறையில் செய்து கொடுத்து விட்டார். ஒப்பந்தப்படி கம்பெனிக்கு அன்றாடச் சாப்பாட்டுக்குரிய பணத்தைக் கூடக் கொடுக்காமல் ஏதேதோ சொல்லி வந்தார். சாப்பாட்டுவகையில் ஒருநாள் தகராறு ஏற்பட்டதும் எங்கள் தந்தையாருக்குப் பிரமாதக் கோபம் வந்துவிட்டது. அன்று கடைசி நாடகம், நடிகர்கள் எல்லோரையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு “ஒருவரும் இன்று நாடகத்திற்குப் போகக் கூடாது” என்று ஆணை பிறப்பித்து விட்டார். விபரம் அறிந்தவுடன் கண்ட்ராக்டரிடமிருந்து ஆள் வந்தது. வந்தவர் தந்தையார் வாசற்படியில் கையில் பெரிய தடியோடு உட்கார்ந்திருக்கும் நிலையைப் பார்த்தவுடன் பயந்து ஓடிவிட்டார். பிறகு கண்ட்ராக்டர் சுவாமிகளிடம் விஷயத்தைச் சொல்ல, சுவாமிகளே நேரில் வந்தார். சுவாமிகள் வருவதை அறிந்ததும் தந்தையார் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டார். ஒன்றும் பேசாமல் கதவைத் திறந்துவிட்டு, எங்கோ போய்விட்டார். அன்று கடைசி நாடகம்; சுவையில்லாமல் கவலையோடு நடந்து முடிந்தது. எல்லோரும் தூத்துக்குடி வந்து சேர்ந்தோம்.

இந்தச் சம்பவத்திற்குப் பின் சுவாமிகளுக்கும், எங்கள் தந்தையாருக்கும் மனக் கசப்பு வளர்ந்தது. துரத்துக்குடிக்கு வந்ததும் திடீரென்று ஒரு நாள் சுவாமிகளிடமும் சொல்லாமல் தந்தையார் எங்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு இரயிலேறி மதுரை வந்து சேர்ந்தார்.

மதுரைக்கு வந்த மறுநாள் தந்தையார், சின்னையா பிள்ளையைப் போய்ப் பார்த்தார். ஏரலில் நடந்த விஷயங்களை யெல்லாம் கூறினார். இனிமேல் கம்பெனியிலிருந்தால் சுவாமிகளுக்கும் தமக்கும் மனத் தாங்கல் வளருமென்றும் கணக்குத் தீர்த்துத் தங்களை நிறுத்திவிடுமாறும் வேண்டிக்கொண்டார். சின்னையா பிள்ளை, கம்பெனியின் முக்கியமான பங்காளி. அதிகப் பணம் போட்டவர். அவர் அப்போது மதுரை பொன்னகரத்தில் தமது குடும்பத்தோடு வசித்து வந்தார். தந்தையாரின் மொழியைக்கேட்டதும், அவர் தந்தையாரைச் சமதானப்படுத்தி விட்டு, உட்புறம்சென்று இரண்டு தந்திகளைக் கொண்டு வந்து