பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


புதியம்புத்துார் ஒரு சிற்றுார்; அந்த ஊர் மக்கள் மிகவும் நல்லவர்கள், எங்களிடம் அன்பும் ஆதரவும் காட்டினார்கள் நாள் தோறும் ஊர் மக்களில் யாராவது ஒருவர், கம்பெனிக்குத் தேவையான காய்கறிகளைக் கொண்டு வந்து கொடுப்பார். வாரத்திற்கு இரண்டு நாள் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுவோம். அந்த நாட்களில் புலால் உணவு போடுவது வழக்கம். ஊர் மக்கள் ஆடுகள், கோழிகள் இவற்றையெல்லாம் அன்புடன் அளித்து உதவினார்கள்.

நாங்கள் புதியம்புத்துருக்கு வந்த பிறகு, சுவாமிகள் சில நாட்கள் எங்களோடு பேசாதிருந்தார். அவரைப் பார்க்கவே எங்களுக்குப் பயமாக இருந்தது. என்னுடைய பாடங்களை யெல்லாம் வேறொரு பையனுக்குக் கொடுத்தார். பெரியண்ணாவின் பாடங்களையும் கேட்டனுப்பினார். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. நான் ‘சுலோசன சதி’ யில் போடும் நாரதர், இலட்சுமனன், சின்னண்ணா போடும் ‘ராமர்’ ஆகிய பாடங்களை யெல்லாம் கொண்டு வரும்படி ஒருநாள் என்னிடமே சொன்னார். நான் அழுதுகொண்டே போய் அப்பாவிடம் கூறினேன். அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. எங்கள் மூன்று பேருடைய பாடங்களும் வைத்திருந்த புத்தகப் பெட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு போய், சுவாமிகளின் முன்னால் போட்டுவிட்டு வந்தார். சுவாமிகள் இப்படி நடக்குமென்று சற்றும் எதிர்பார்க்க வில்லை. உடனே ஏதோ சமாதானம் கூறும் முறையில், “பாடங்களைப் பலபேர் நெட்டுருப் போட்டு வைத்திருந்தால் நோய் நொடி ஏற்படும் சமயங்களில், பயன்படுமே என்பதற்காகத்தான் பாடங்களைக் கேட்டேன். வேறு தவறான எண்ணம் எதுவுமில்லை” என்று மழுப்பினார். புத்தகப் பெட்டி எல்லாப் பாடங்களுடனும் எங்கள் அறைக்கு மீண்டும் வந்து சேர்ந்தது.