பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


சாரீரத்தைக் கொடுத்திருப்பதாலல்லவா இந்த வம்பெல்லாம் வருகிறது. பாவிகள் எதற்கெடுத்தாலும் என்னையே போட்டுச் சாகடிக்கிறார்களே! எனக்குச் சாரீரம் கெட்டுப் போகும் வரை இந்தப் பிள்ளையாரை உடைத்தே தீருவேன் என்று சொல்லி மீண்டும் கற்களை வீசினார். அரச மரத்தடிப் பிள்ளையார் சிறிது சேதமடைந்தது. நல்ல குரல் வேண்டும், நல்ல வேடம் புனைய வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டுத் தினமும் பிள்ளையாரை வழிபட்டு வரும் நடிகர்களும் சிலர் இருந்தார்கள். அவர்களுக்கு இளைஞரது செயல் பெரும் வியப்பாக இருந்தது.

ஒரு நாளோடு அவர் இந்தப் பிள்ளையார் உடைப்பை நிறுத்தவில்லை. சுவாமிகள் காதில் செய்தி எட்டிக் கண்டிக்கும் வரை தினமும் இவ்வாறு பிள்ளையார் பூசை நடத்திக் கொண்டே யிருந்தார். இப்படிப் பிள்ளையார் உடைப்பை நடத்திய அந்த நடிகப் பெரு வீரர் யார் தெரியுமா? நன்கு மெருகேறிய பழம் பெரும் நகைச்சுவை நடிகர் அவர். அவரது பெயரை அறிந்து கொள்ள ஆவல் உண்டாகிறதல்லவா? அவர்தாம் திரைப்பட நடிகர் திரு எம். ஆர். சாமிநாதன்!

எம். ஆர். சாமிநாதன்

மிகச் சிறந்த நடிகர், நகைச்சுவை நடிகர்களுக்குச் சாதாரணமாக எல்லா விதப் பாத்திரங்களையும் நடிக்க வராது. அப்படி ஒரு சிலர் நடித்தாலும் ரசிகர்கள் நகைச் சுவையுடனேயே அவர் நடிப்பை வரவேற்பது வழக்கம். திரு சாமிநாதன் அதற்கு முற்றிலும் விலக்கானவர் எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடித்து வெற்றி பெற்றுவிடுவார். அவர் தொடர்ந்து தத்துவ மீனலோசினி வித்துவ பால சபையிலும், பிறகு எங்கள் சொந்தக் கம்பெனியிலும் பல ஆண்டுகள் நகைச்சுவை நடிகராக விளங்கி யிருக்கிறார், நாங்கள் முதன் முதலாகத் திரைப்படத் துறையில் புகுந்தபோதும் எங்கள் குழுவோடு சேர்ந்து “மேனகா” படத்தில் நடித்தவர். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கு, எம். ஆர் சாமிநாதன் அவர்களை ‘ஆசான்’ என்றே குறிப்பிடவேண்டும். இருவரும் பல ஆண்டுகள் எங்கள் குழுவில் நகைச்சுவை நடிகர்களாக இருந்திருக்கிறார்கள்.