பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
79


ஒருநாள் வழக்கம்போல் நாடகம் முடிந்து திரும்பி வரும் போது, புதர்களின் மறைவிலிருந்து திடிரென்று, ஐயா, ஐயா, என்று ஒரு குரல் கேட்டது. எல்லோரும் சட்டென்று நின்றார்கள். எனக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. முன்னால் சென்றவர், விளக்கை முகத்திற்கு நேரே பிடித்தபடி, “யாரையா?” என்று அதட்டிக் கேட்டார். இருளின் வலிமையை இன்னும் அதிகப் படுத்திக் காட்டும் அந்த மங்கிய வெளிச்சத்தில் கரிய நிறமுடைய ஒரு மனித உருவம் நிற்பது தெரிந்தது. பெரிய ஆஜானுபாகு வான தோற்றம்: முழுதும் வெண்மை நிறமுடைய கிருதா மீசை; வலது கையில் நீளமான ஒரு வேல் கம்பு. அந்த உருவத்தைப் பார்க்கவே பயமாக. இருந்தது.

“சங்கர தாஸ்சாமி கூட வருகளா? அவங்களைப் பாக்கணும் செளகரியமாய்ப் பேசணும்”.

அந்த உருவம் இவ்வாறு பேசியது. உடனே எங்களில் ஒருவர், “சாமிங்களுக்கு ஒடம்புசரியில்லே, நாளைக்குவெள்ளென முடிமன்னுக்கு வாங்க பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு நடந்தார். நாங்களும் அவரைத் தொடர்ந்தோம்.

உண்மைதான். முடிமன்னுக்கு வரும்போதே சுவாமிகள் உடல்நலம் குன்றியிருந்தார். இரவில் நாடகக் கொட்டகைக்கு வருவதில்லை. ஒருதனி வீட்டில் தங்கியிருந்தார். மறுநாள் பொழுது புலர்ந்ததும் நானும் மற்றும் சில நடிகர்களும் சுவாமிகள் இருந்தவீட்டிற்குச்சென்றோம். இரவு கண்டது பேயா, மனித உருவமா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.

ஏட்டுச் சுவடிகள்

மனிதன்தான், ஐயமில்லை. அதே பெரியவர், கைத்தடியை ஊன்றியபடி இருமிக்கொண்டே வந்து, சுவாமிகள் அருகில் உட்கார்ந்தார். சுவாமிகளுக்கும் பெரியவருக்கும் நீண்ட நேரம் பேச்சு நடந்தது. பெரியவர் கூறியதன் சுருக்கம் இதுதான்.

கட்டபொம்மு ஊமைத்துரையைப் பற்றியும்’ தாகுப்பதிப் பிள்ளை, பகதூர் வெள்ளை இவர்களைப் பற்றியும் பலப்பலப்பொய்க் கதைகள் கட்டிவிடப்படுகின்றன. வெள்ளையருக்குப் பயந்து