பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சென்னை மாநகரம்

சென்னைக்குப் போவது உறுதி செய்யப்பட்டதால் முடிமன் நாடகம் முடிந்ததும் எல்லோரும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். சங்கரதாஸ் சுவாமிகளின் உடல்நிலை சரியில்லாததால் அவர்கள் மட்டும் தூத்துக்குடிக்குப் புறப்பட்டார்கள். உடல் நிலையைச் சரிசெய்து கொண்டு தாம் சென்னைக்கு வருவதாகவும் கம் பெனியைச் சென்னைக்குப் போகும்படியாகவும் சுவாமிகள் சொன்னதாக அறிந்தோம்.

மதுரைக்கு வந்தபின் ஒருவார காலம் சென்னைப் பயண ஏற்பாடுகள் கோலாகலமாக இருந்தன. எங்களுக்கெல்லாம் ஒரே குதுகலம். பட்டினத்தைப் பார்க்கப் போகிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி. நாள், நட்சத்திரம், யோகம், சூலம் இராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்துப் புறப்பட்டார்கள். 1921 செப்டம்பர் மாதம் மதுரையிலிருந்து இரயிலேறிச் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.

எழும்பூரில் இரயிலே விட்டிறங்கியதும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பெருந்திகைப்பாக இருந்தது. இரயில் நிலையமும், மக்கள் கூட்டமும், இதர சூழல்களும் எங்களுக்கு புதுமையாகக் காட்சியளித்தன. மதுரை, திருச்சிராப்பள்ளி இரயில் நிலையங்களெல்லாம் இன்று இருக்கும் அளவு பெரியதாக அப்போது இல்லை. எனவே, அன்றையச் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் பிரம்மாண்டமானதாகத் தோன்றியது. நடிகர்களை அழைத்துப் போகக் காண்ட்ராக்டர்கள் கார்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லோரும் கார்களில் ஏறிப் புறப்பட்டோம். வழியில் டிராம் வண்டிகளைப் பார்த்தபோது ஒரே வியப்பு! இரயில் வண்டி தெருக்களிலேயே போவதாக எண்ணினோம்.