பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
86


சிகிச்சை முறைகளும் அன்னையாருக்கு நன்றாகத் தெரியும். சென்னைக்கு வரும் வரையில் நாங்கள் டாக்டரைச் சந்தித்ததே யில்லை. எந்த நோய் வந்தாலும் அன்னையாரே ஏதாவது கஷாயம் போட்டுக் கொடுப்பார்கள். இரண்டொரு நாளில் குணமாய் விடும். இப்பொழுது எங்களைப் பீடித்தது, பட்டணத்திற்கே உரிய புதுக் காய்ச்சலாக இருந்ததால், அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.

புதிய மருந்து

தந்தையார் இரண்டு வாரங்கள் ஏதேதோ மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார். நோயினல் நாடகம் தடைப்படவில்லை. அது தொடர்ந்து நடைபெற்று வந்தது. நாங்கள் ஜுரத்துடன் மிகவும் போராடி எப்படியோ நடித்தோம். இறுதியாகத் தந்தையார் தமது சொந்த மருந்தையே கொடுக்கத் தொடங்கினார். குளிர் நின்று காய்ச்சல் வந்ததும் நாடகத்திற்குப் புறப்படும் நேரத்தில் கொஞ்சம் பிராந்தியை ஊற்றி எங்களுக்குக் குடிக்கக் கொடுப்பார். இதைக் குடித்ததும் தேகத்தில் ஒரு புதிய தெம்பு ஏற்படும். நோயினால் உண்டாகும் தளர்ச்சி தெரியாமல் நாங்கள் நடித்து விடுவோம். காய்ச்சல் உண்டாகும் நாட்களில் எல்லாம் இவ்வாறு பிராந்தியே எங்களுக்கு மருந்தாக இருந்து வந்தது. நாடகம் முடிவடையும் நேரத்தில் நாங்கள் உணர்வற்ற நிலையில் இருப்போம். எங்களை வண்டியில் போட்டுத்தான்.வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பது வழக்கம்.

தோழி கதாநாயகியானாள்

ஒருநாள் சத்தியவான் சாவித்திரி நடந்து கொண்டிருந்தது. நந்தவனக் காட்சி. சின்னண்ணா தோழியாக நடித்தார். ஒரே ஒரு வசனம்தான் தோழிக்கு உண்டு. சாவித்திரி ஒரு நீண்ட வசனத்தைப் பேசி முடித்ததும் தோழி,

“ஆம் அம்மா, இங்குள்ள கிளிகள் உன்சொற்களைக் கேட்டும், அன்னங்கள் உன் நடையை மதித்தும், மயில்கள் உன் சாயலைக்கண்டு வெட்கியும் அங்கங்கு பதுங்கி நாண முறுகின்றன பார்!”....

என அதற்கு விடை பகருகிறாள். சின்னண்ணா திரு டி. கே. முத்துசாமி இந்த வசனத்தை நடிப்புணர்ச்சியோடு பேசியதும்