பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
87


சபையில் பெருத்த கரகோஷம் ஏற்பட்டது. சாவித்திரியைவிடத் தோழி நன்றாயிருப்பதாய்ச் சபையோர் பேசிக்கொண்டார்கள். சின்னண்ணாவுக்கு யோகம் அடித்தது; இரண்டாவது முறை சாவித்திரி நாடகம் போட்டபோது, சின்னண்ணாவே சாவித்திரி யாக நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து பல நாடகங்களில் கதாநாயகி வேடம் இவரைத் தேடி வந்தது.

சென்னைக்கு வந்தவுடன் தந்தையார் ஒரு நாதசுர வித்துவானை எங்களுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார். அந்த வித்துவானிடம் சிரத்தையோடு இசை பயின்றவர் சின்னண்ணா ஒருவர்தான். நோய், நொடி இவற்றினிடையேகூட விடாமல் இசைப் பயிற்சியில் முழு அக்கரை செலுத்தியதால் மிக விரைவில் சின்னண்ணா நன்றாகப் பாடவும் பழகிக் கொண்டார். எல்லா நாடகங்களிலும் கதாநாயகியாக நடித்து நல்ல புகழைப் பெற்றார்.

திடுக்கிடும் செய்தி

ஒருநாள் திடீரென்று வந்த தந்தி எங்கள் எல்லோரையும் திடுக்கிட வைத்தது.

“சுவாமிகள் வாத நோயால் பீடிக்கப்பட்டார்; வாய்பேச முடியவில்லை. வலது கையும், இடது காலும் முடங்கி விட்டது. படுக்கையில் இருக்கிறார்”.

எதிரிகளும் இரக்கம் கொள்ளத்தக்க இச்செய்தியை அறிந்ததும், கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான பழனியா பிள்ளை தூத்துக்குடிக்கு விரைந்தார். சென்னையிலேயே வைத்து, சிகிச்சை செய்யும் நோக்கோடு சுவாமிகளை மிகவும் சிரமப்பட்டு, சென்னைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

நாங்கள் கம்பெனி வீட்டிற்குச்சென்று சுவாமிகளைப் பார்த்தோம். எல்லோருடைய கண்களிலும் நீர் பொங்கி வழிந்தது. எத்தனை எத்தனையோ நடிகர்களைப் பேச வைத்த பேராசான் இன்று பேச முடியாமல் ஊமையாகக் கிடந்தார். எண்ணற்ற நாடகங்களை எழுதிக் குவித்த வலக்கரம் செயலற்ற நிலையில் முடங்கிக் கிடந்தது. ஏறுபோல் நடமாடிய அவரது கால்கள் பிறர் உதவியின்றி எழுந்திருக்க இயலாத நிலையில் அடங்கிக் கிடந்தன; பார்த்தோம், பரிதவித்தோம்!