பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


வசூல் இல்லாததால் செலவுக்குப் பணம் கிடைப்பது கூடக் கஷ்டமாகிவிட்டது.

பாட்டியார் மறைவு

இந்த நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து எங்கள் பாட்டி இறந்து போனதாக ஒருநாள் தகவல் வந்தது. அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஒத்துப் போகாததால் பாட்டி தம்இளைய மகனுடன் திருவனந்தபுரத்தில் இருக்க நேர்ந்ததாக முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த மரணச்செய்தி வந்த அன்று இரவு, நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. உரிமையாளர்களில் ஒருவரான சின்னையா பிள்ளை காலையில் வந்த கடிதத்தை இரவு ஏழு மணிக்குக் கொண்டு வந்து தந்தையாரிடம் கொடுத்தார். இருவரும் ஏதேதோ பேசினார்கள். எல்லோரும் காய்ச்சலோடு குளித்துவிட்டு நாடகத்தில் நடிக்கச் சென்றோம். ஊருக்குப் புறப்படும் எண்ணம் கைவிடப்பட்டது. வீட்டுச் செலவுக்குக் கம்பெனியிலிருந்து சரியாகப் பணம் கிடைப்பதில்லை. எல்லோரும் நோயுற்றதால், வீட்டில் யாரும் சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லாதிருந்தது. ரொட்டியும், காபியும்தான் எல்லோருக்கும் உணவு. இப்படியே நாட்கள் ஓடின. நாடகமும் ரூ. 50, 60 வசூலில் நடந்து கொண்டிருந்தது.

காமேஸ்வர ஐயர்

உரிமையாளர்களில் இருவர் ஊருக்குப் போய்ச்சேர்ந்தார்கள். பழனியாப்பிள்ளை, கருப்பையாபிள்ளை, இருவர் மட்டுமே இருந்து நிர்வாகத்தை நடத்தி வந்தார்கள். கம்பெனி தள்ளாடியது. இந்தச் சமயத்தில் திரு. காமேஸ்வர ஐயர் என்ற ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் கருப்பையாபிள்ளையின் நண்பர். அவர் தாமாகவே கம்பெனி நிர்வாகங்களில் தலையிட்டுக் கம்பெனியை வேலூருக்குக் கொண்டுபோக ஏற்பாடுகள் செய்தார். அவருடைய முயற்சியால் எல்லோரும் சென்னையை விட்டு வேலூருக்கு வந்து சேர்ந்தோம்.

வேலூர் தோட்டப்பாளையம் கொட்டகையில் நாடகங்கள் தொடங்கின. நாடகங்களுக்கு வசூல் நல்ல முறையில் இருந்து வந்தது. அப்போது தோட்டப்பாளையம் கொட்டகைக்குச்