பக்கம்:எனது பூங்கா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7

கட்டுரைகள் முழுவதிலும் கருத்தும் சொல்லும் உயி ருடையன போல கடந்து சென்று தாம் குறித்த முடிவை அடைவதைக் காணலாம். உயிருள்ள பொருள்கள் புற வுறுப்பின் நிகழ்ச்சிகளாலும் மனமாகிய அகவுறுப்பின் நிகழ்ச்சிகளாலும் தம்மையடுத்துவரும் பிற உயிர்களைப் பாதிப்பதுபோல, இவ்வுரை நடையும் வாசகர்களை நேரே பாதிக்கிறது. ஆசிரியர் மனத்துக்கும் வாசகர் மனத்துக்கும் இடையே யாதொரு திரையும் இல்லை. எவ்வித மறைவும் இல்லை. இவ்வாறு மறைவும் திரையும் இன்றி எண்ணிய பொருளை வாசகர் மனத்துள் நேராக, எளிதிற் செல்லச் செய்யும் ஆற்றல் எல்லாருக்கும் வாய்ப்பதன்று. நேர்மை யும், எளிமையும் தெளிவும், சிறந்த உரைநடைக்கு இன்றி யமையாத குணங்களாகும். இக்குணங்கள் இக்கட்டுரை களில் சிறந்து விளங்குவது பாராட்டி எடுத்துக் கூறத் தகுவது.

 விஷயங்களைத் தெளிவாக எடுத்துக் கூறுதல் ஒரு வகை ஆற்றல் அவற்றை மனதிற் பதியும்படி செய்வது பிறிதொருவகை ஆற்றல். விஷயங்களைப் படம் தீட்டுவது போன்று மனக்கண் முன்னே சித்திரித்துக் காட்டுவதிலே இவ்வகை ஆற்றல் புலனாகிறது. பொருளற்ற, வெறுஞ் சொல்லடுக்குகளாலே சித்திரித்தால், விஷயம் மனத்திற் பதிந்து விடுவதில்லை. விஷய விளக்கத்திற்கு அநுகூல மாகிய உதாரணங்களின் சிறப்பினாலும், உபமானங்களின் அழகினாலும், விஷயத்தை அடுத்தும் அதற்கு முன்பும் பின்புமாயமைந்த பொருள்கள், நிகழ்ச்சிகள் முதலிய வற்றின் வர்ணனைகளாலும், மனம் மெழுகுபோல் இளகித் தன்மீது பொறிக்கப் பெறும் விஷய-முத்திரையை இனிதில் எளிதில் ஏற்றுப் பதித்து வைத்துக்கொள்ளுகிறது. இவ் வாறு அமைந்த சித்திரங்கள் இந்நூலில் உள்ளமை இதன் பெருமையை நன்கு உணர்த்துகிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/6&oldid=1298879" இலிருந்து மீள்விக்கப்பட்டது