பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 0 என் அமெரிக்கப் பயணம்

வைர நகைப்பகுதி உள்ளது. இங்கு பல்வேறு வகை வைர மோதிரங்கள், வைர மூக்குத்திகள், வைரமணி மாலைகள், வைர இடையணிகள் முதலியவை வகைப்படுத்தி வைத்திருப்பதைக் கண்டு மகிழலாம்; வியப்பெய்தலாம். நமக்குத் தேவையானவற்றைப் பொறுக்கியெடுத்தால் விலை சொல்லுவார்கள். விரலுக்குப் பெரிதாக இருந்தாலும் அல்லது சற்றுச் சிறிதாக இருந்தாலும் மாற்றிச் சரிப்படுத்தித் தருவார்கள். இதற்கு மூன்று அல்லது நான்கு நாள் தவணை சொல்லுவார்கள். அந்த நாளில் சென்று நாம் அதனைப் பெற்றுக் கொள்ளவேண்டும். நாங்கள் வேண்டா என்று மறுத்தாலும் என் மகன் எனக்கு ஒன்றும் என் துணைவிக்கு ஒன்றுமாக இரண்டு வைர மோதிரங்களை வாங்கினான். பல்லாயிரக் கணக்கான மைல் தொலைவில் தாய் தந்தையர்களைப் பிரிந்து வாழும் செல்வ மகனின் தாய்-தந்தைப் பாசத்தை என்னவென்று சொல்வது? அன்பைப் புலப்படுத்துவதற்கு ஒருவர் விதவிதமான உண்ணும் உணவு வகைகளை அல்லது தின்னும் தின்பண்ட வகைகளைத் தந்து உண்ணச் செய்யலாம்; அல்லது தின்னச் செய்யலாம். கண்ணப்ப நாயனார் காளத்தி மலையிலுள்ள குடுமித் தேவருக்கு மான் கறியை நல்கியதையும், கங்கை வேடன் குகப் பெருமான் அயோத்தி அண்ணல் இராமபிரானுக்கு தேனும் மீனும் அன்புடன் படைத்தமையையும் இலக்கியங்களில் படித்ததையும் நினைவு கூர்கின்றேன். இவை தவிர அன்பைப் புலப்படுத்துவதற்கு மற்றொரு வழி விதவிதமான ஆடையணிகளைத் தந்து மகிழ்வதாகும். என் மகன் தன் தாய்க்கு விலையுயர்ந்த காஞ்சிப்பட்டுச் சேலை ஒன்று வாங்கித் தந்து மகிழ்ந்தான். நம்மூராகிய காஞ்சியில் கிடைக்கும் அதே சேலைக்கு இரண்டு மடங்குக்கு மேல் விலை தந்து வாங்க வேண்டும். மகன் காட்டும் அன்புக்கு முன் விலை உயர்வு ஒரு பொருட்டாகத் தோன்றுவதில்லை.

பல்வேறு தங்க நகைக் கடைகளில் புகுந்து பல்வேறு நகை வகைகளைக் கண்டு மகிழ்ந்தோம். சேலைக் கடைகளில் புகுந்து அவை வைக்கப் பெற்றுள்ள முறை வகைகளைப் பார்த்து மகிழ்ந்தோம். 25 டாலர், 30 டாலர், 35 டாலர் விலைகளுள்ளவற்றை வகைப்படுத்தி வைத்திருக்குமுறை நமக்கு வியப்பூட்டுவதாக இருந்தது. அதிக விலையுள்ள சேலைகளைப் பார்க்க வேண்டுமென்று தெரிவித்தால், அவற்றை எடுத்துக் காட்டி விலை சொல்லுவார்கள். காஞ்சிப்பட்டு, மைசூர்ப்பட்டு, பெங்களூர்ப் பட்டு இவை விதவிதமான சரிகை முந்தி, சரிகையில்லா முந்தி இவற்றுடன் பல்வேறு வகைகள் கிடைக்கும். நம்மூரில் கிடைப்பவைதாம். விலைதான் இரண்டு பங்குக்கு மேல் இருக்கும். அமெரிக்காவில் வாங்கினோம் என்ற பெருமை வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம்.