பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 85

டாக்டர் சி.ஏ. இராமச்சந்திரனும் (இந்திய வரலாற்றுத் துறை) உறுப்பினர்களாக அமர்ந்தார்கள். மாநிலக் கல்லூரியில் வடமொழித்துறைப் பேராசிரியர்-துறைத் தலைவராகப் பணியாற்றிய திருஞானசம்பந்தம்பிள்ளை ஒய்வுபெற்றபின், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சென்னையில் நிறுவியுள்ள ஆய்வு நிறுவனம் ஒன்றில் ஆய்வாளராகப் பணியாற்றி அது மூடப்பெற்றபின் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒரிரண்டு ஆண்டுகள் பதிவாளராகப் பணியாற்றி அப்பணிக்காலம் முடிவுற்றதும் மரபுவழிப் பண்பாட்டு நிறுவன இயக்குநர் பதவியில் கண் வைக்கின்றார். மிகவும் நல்லவர். ஏதாவது பணியிலிருந்து கொண்டு ஊதியம் பெற ஆசைப் படுபவர். நல்லவராகவும் செல்வாக்குள்ளவராகவும் இருந்ததனால் பணியும் எளிதாகக் கிடைத்து விடுகின்றது. டாக்டர் ந. சஞ்சீவி என் பெயரையும் டாக்டர் சி. ஏ. இராமச்சந்திரன் திருஞானசம்பந்தம் பிள்ளை பெயரையும் குழு முன் வைக்கிறார்கள். டாக்டர் இராமச்சந்திரன் “டாக்டர் ரெட்டியாருக்கு வடமொழி தெரியாது; அவர் இப்பதவிக்குப் பொருத்தமானவர் ஆகார்” என்று பேச, டாக்டர் பிள்ளையவர்கள் செல்வாக்குள்ளவராக இருந்தபடியால், டாக்டர் ந. சஞ்சீவி உயர்ந்த நெறியாளராகவும் பண்பாளராகவும் இருந்தபடியால் டாக்டர் இராமச்சந்திரனை மறுத்துப் பேசவும் என் பெயரைப் பரிந்துரைக்கவும் செய்யவில்லை; மவுனமாக இருந்து விட்டார். டாக்டர் பிள்ளையவர்கள் இயக்குநராக நியமனம் பெற்று ஒருசில ஆண்டுகள் பணியாற்றி உடல்நலக் கோளாறினால் பதவியிலிருந்து விலகிவிட்டார். அவரையடுத்து டாக்டர் கே.ஆர். அநுமந்தன் (மதுரைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் துறைத் தலைவராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்) இப்பணியில் அமர்ந்தார். டாக்டர் அநுமந்தன் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் மருமகனானதால் மாமனாரின் புகழ்ஒளி இவருக்கு எப்போதும் கைகொடுத்து உதவும்.

இளமைக்காலம் முதல் அறிவியல் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட நான், தனியாகத் தமிழ் இலக்கியம் கற்கத் தொடங்கும் நிலையில் சங்க இலக்கியம் தான் என்னை அதிகமாகக் கவர்ந்தது. அவற்றில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறம்-192) என்ற கணியன் பூங்குன்றனாரின் ஒரே பாட்டு. ஒப்பற்ற பாட்டு-என் உள்ளத்தை அதிகமாகத் தொட்டபாட்டு. அதிலுள்ள

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

‘.....நீர்வழிப்படுஉம் புணைபோல்

முறைவழிப்படும் ஆருயிர்'