பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6.நியுஜெர்ஸி மாநிலத்தில் உள்ளவை

நியுயார்க் நகரில் தங்கியிருந்த போதிலும் அண்டை மாநிலமாகிய நியுஜெர்ஸி மாநிலத்தில் இரண்டு முக்கிய இடங்களைப் பார்க்க நேர்ந்தது. அவற்றுள் ஒன்று புனிதம் திகழும் தெய்வத்திருக்கோயில்; மற்றொன்று ‘ஆக்கம் கருதி முதல் இழக்கும்’ சூதாடுகளன். இன்று திருக்கோயில்களும் அவரவர் வாழ்க்கை அவரவர் பிராரப்தத்தால் (நுகர்வினையால்) அமைகின்றது என்பதை மறந்து மனிதன் தெய்வங்களை தட்டும் புனிதத்தை பேரம் பேசும் வாணிக மன்றமாக மாற்றிக் கெடுப்பதை வருத்தத்துடன் காண்கின்றோம். நன்றும் தீதும் கலந்தது தானே மானிட வாழ்க்கை அல்லவா? இந்த இடங்கள் பற்றிய விவரங்களை ஈண்டுத் தருகின்றேன்.

1. திருவேங்கடவன் திருக்கோயில்

(ஏப்ரல் 8), மாலை 4.00 மணிக்குப் புறப்பட்டுச் சென்று இரவு 9.30 மணிக்குத் திரும்பினோம். இத்திருக்கோயில் நியுயார்க்குக்கு அருகில் உள்ள நியுஜெர்ஸி மாநிலத்தில் உள்ளது. 40 கல் தொலைவில் உள்ளது. நியுயார்க் மாநிலத்தில் 15 கல் தொலைவும் நியுஜெர்சி மாநிலத்தில் 25 கல் தொலைவும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. நாங்கள் சென்றபோது மாலைவழிபாடு (சாயரட்சை) நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் தங்குமிடத்தில் 4 கல் தொலைவிலுள்ள திருக்கோயிலில் விநாயகர் பிரதான தேவதைபோல், இங்குப்பிரதான தேவதை வேங்கடவன். திருமலை-திருப்பதி சூழ்நிலை இங்கு நிலவியிருந்தது.

ஒரு வரிசையில் விநாயகர், சிவபெருமான், வள்ளி தெய்வயானையுடன் முருகன், ஐயப்பன், சத்திய நாராயணன் திருவுருவங்கள் அமைந்திருந்தன. இவற்றை விபூதியுடன் சிவ வேடம் தாங்கிய அர்ச்சகர் வழிபாடு நடத்தி வருகின்றார்.

மற்றொரு வரிசையில் சீதேவி, பூதேவி, இலட்சுமிநாராயணன், துர்க்கை, இராதாகிருட்டிணன், ராம்பரிவார்-இராமன், இலக்குவன், சீதை அநுமன் அடங்கிய மூர்த்திகள் அமைந்திருந்தன. இவற்றைத் திருமண் அணிந்திருந்த அர்ச்சகர் வழிபாடு செய்து வருகிறார்.

ஓரிடத்தில் இலட்சுமி-பார்வதி-சரசுவதி மூவருடைய திருவுருவங்களும் சேர்ந்து அமைந்திருந்தன. இது இங்கு தனிச் சிறப்பு. நவக்கிரக அமைப்பு தமிழ்நாட்டு இறக்குமதி. பெரும்பாலும் வைணவத்திருக்கோயில்களில் நவக்கிரக வழிபாட்டிற்கு இடம் இல்லை.