பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 ♦ என் அமெரிக்கப் பயணம்

திரும்பி மீண்டும் வர நினைப்பர். இக்காட்சியைக் கண்டுகளித்த வண்ணம் திரும்புகின்றோம். (படம் - 51, 52, 53, 54, 55)

ஓரிடத்தில் கறுப்பர்[1] இனத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டியைக் காண்கின்றோம். வேட்டி கட்டியுள்ள நானும் சேலையணிந்துள்ள என் மனைவியும் அப் பெருமாட்டிக்கு விநோத மனிதர்களாகக் காணப் பெற்றோம் போலும்! அவர் என்னிடம் பேச்சுக் கொடுக்கிறார்.

வினா: ‘நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ?’

விடை: ‘எங்கள் ஊர் மதராஸ், தமிழ்நாடு, இந்தியா’

வினா: உங்களுக்கு அமெரிக்கா பிடித்திருக்கிறதா ?

விடை: ‘பிடித்திருக்கிறது. சுற்றிப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றோம்.’

வினா: ‘நீங்கள் இங்கேயே தங்கி விடுவதற்கு விரும்புகிறீர்களா ?’

இந்நிலையில் நான் வினா விடுக்கின்றேன். அவர் மறுமொழி யளிக்கின்றார்.

வினா: ‘உங்கட்குத் தாயார் இருக்கிறார்களா ?’

விடை: ‘ஆம், இருக்கிறார்கள்’

வினா: ‘நீங்கள் அவர்களை மறக்க முடியுமா?’

விடை: ‘முடியாது; அவர் என்னைப் பெற்றவர்’

நான் “இந்தியா எங்களைப் பெற்றநாடு. அது தாய்நாடு. ஆகவே அதனை மறக்க முடியாது. எங்கள் மகன், மருமகள், பேரர்கள், பேத்திமார் இங்குப் பிழைப்பின் நிமித்தம் அலுவல்கள் பார்க்கிறார்கள். எங்கள் மகன் குடும்பம் ‘பச்சை அட்டை[2] பெற்று நிரந்தரக் குடிமக்களாகி விட்டார்கள். நாங்கள் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி மூன்று மாத காலம் தற்காலிகமாக வந்துள்ளோம். ஜூன் 24-25 திரும்புகிறோம்” என்று சொன்னேன்.

இருவரும் ‘கை குலுக்கி’ப் பிரிந்தோம். பார்த்துக்கொண்டே திரும்புகிறோம். கார் விட்ட இடத்திற்கு வந்து காரில் ஏறி இல்லம் ஏகுகின்றோம். பகல் 1 மணிக்கு இல்லம் வந்தடைந்தோம்.

5. தமிழ்ச் சங்கம்

இங்கு என் பேத்தி மிருனாளினி அரும் பாடுபட்டு தமிழ்ச் சங்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாள். சிறு வயது முதல் அறிவுக் கூர்மையுடையவள். எடுத்த காரியத்தை மிக்க திறமையுடன் செய்பவள் என்பதை நான் அறிந்தவன்.


  1. Nigro
  2. Green card