பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை ◆ 145




முயன்று கற்க வேண்டிய சகல சாத்திரங்களையும் கண்ணன் ஒரு சில மாதங்களில் கற்றுத் தெளிந்தான். ஆசிரியருக்கு ஒரே வியப்பு. அவன் ஒர் அவதார புருஷன் என்றே கருதினார். குரு தட்சினை வழங்க வந்தபோது “கடலில் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்னர் மேற்குக் கடலில் பிரபாச தீர்த்தத்தில் துறையில் நீராடும்போது மூழ்கி இறந்த தம் மகனைக் கொண்டுவந்துதர வேண்டும்” என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார். கண்ணனும் அங்ஙனமே கொண்டு வந்து தருவதாக ஒப்புக் கொண்டான்.

கண்ணபெருமான் வருணனால் விவரம் அறிகிறான். சங்கு வடிவமுள்ள பாஞ்சசன்னியம் என்ற ஒர் அசுரன் அவனைக் கைப்பற்றிச் சென்றதாக அறிகின்றான். கடலில் குதித்துச் செல்லும்போது ஒரு சங்குக் கூட்டத்தைக் காண்கின்றான். சங்குகளின் கூட்டத்தைச் ‘சங்கம் என்று வழங்குவது மரபு. பிற்காலத்தில் இச்சொல் மக்கட் கூட்டத்திற்கும் வழங்கும் மரபு உண்டாயிற்று என்பதை நாம் அறிகின்றோம். முதலில் பார்த்த சங்குக் கூட்டத்தில் ‘வலம்புரிச் சங்கு’ ஒன்று நடுவில் இருக்க ஆயிரக்கணக்கான இடம்புரிச் சங்குகள் சுற்றி வந்துகொண்டிருந்தன. இவை யாவும் இவ்வடிவத்திலுள்ள அரக்கர்கள். இங்கு மகன் காணப் பெறவில்லை. சற்றுத் தொலைவு சென்றவுடன் மற்றோர் சங்குக் கூட்டம் அவன் கண்ணில் படுகின்றது. இங்கு ‘சலஞ்சலம்’ என்ற சங்கு நடுவிலிருக்க ஆயிரக்கணக்கான வலம்புரிச் சங்குகள் சுற்றி வந்துகொண்டிருந்தன. இங்கும் மகன் காணப் பெறவில்லை. மேலும் சற்றுத் தொலைவு கடந்தவுடன் பிறிதொரு சங்குக் கூட்டம் காணப் பெறுகின்றது.இங்கு வருணன் குறிப்பிட்ட ‘பாஞ்சசன்னியம்’ என்ற சங்கைச் சுற்றி ஆயிரக்கணக்கான சலஞ்சலம் என்ற சங்குகள் வலம் வந்து கொண்டிருந்தன. கண்ணன் அக் கூட்டத்தினுள் புகுந்து அவ்வசுரனைக் கொன்று அவன் உடலாகிய பாஞ்சசன்னியத்தை எடுத்து வாயில் வைத்து ஊதிக்கொண்டு யமபுரிக்கு எழுந்தருளி அங்கு ‘யாதனை’'யிற்கிடந்த சிறுவனை அவன் இறந்தபோது கொண்டிருந்த உருவம் மாறாதபடி கொண்டு வந்து தன் ஆசாரியப் பெருமகனாரிடம் தட்சினையாகக் கொடுத்தான். இன்று திருமால் இடத் திருக்கரத்தில் சங்காகத் திகழ்வது இப்பாஞ்சசன்னிய அசுரனின் உடலே என்பதை நாம் அறிகின்றோம்.

(6) வைதிகன் பிள்ளைகள்: இதுவும் ஆழ்வார் பாசுரத்தில் மட்டிலும் அறியப்பெறும் கதையாகும். “துப்புடையார்கள் தம்” (பெரியாழ். திரு. 1, 6 7) என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரத்தில்,

தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
தனியொரு தேர்கடவித் தாயோடு கூட்டிய என்
அப்ப!