பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை ◆147

 திவ்விய சுதந்திரத்தைக் காட்டுவதற்காகவும் கண்ணபிரானின் அவதார திருமேனியைப் பரமபதத்தில் பார்ப்பதற்காகவும் தாங்களே இத் தந்திரத்தைக் கையாண்டதாகவும் செப்புகின்றனர். பிள்ளைகள் நால்வரையும் ஆதி உருவத்தில் ஒன்றும் குறையாமல் கொண்டு வந்து அந்தணன் மனைவியிடம் கொடுத்தருளினான். பரமபதம் காலம் நடையாடாத தேசமாகையால் குழந்தைகள் நால்வரும் பிறந்தமேனியாக இருந்தனர் என்றும், காலம் நடையாடும் இப்பூவுலகிற்கு வந்ததும் குழந்தைகள் 3, 2, 1 வயது உருவத்துடன் இருந்ததாகவும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

(7) பக்த விலோசனம்: இதுபற்றிய குறிப்பு “கார்த்தண் முகிலும் கருவிளையும்” (நாச் திரு. 12 : 6) என்ற நாச்சியார் திருமொழிப் பாசுரத்தில் வருகின்றது.

வேர்த்துப் பசித்து வயிறசைந்து
வேண்டடிசில் உண்ணும்போது ஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும்
பக்தவிலோசநத்து உய்த்திடுமின்

என்ற பாசுர அடிகளில் உள்ளது இக்குறிப்பு. இதனைப்பற்றிய உரையாசிரியர்கள் தரும் விளக்கத்தை ஈண்டு தருகின்றேன்.

‘பக்த விலோசனம்’ யமுனையாற்றங்கரையில் உள்ள ஒர் இடம் ‘பக்தி’ என்ற வடசொல்லிற்கு அன்னம்’ என்பது பொருள்; “விலோசனம்’ என்பதற்குப் ‘பார்வை’ என்பது பொருள். இக்கூட்டுச் சொல் ‘சோறு பார்த்திருக்கும்’ இடம் என்று பொருள் தருகின்றது.

கண்ணனும், பலராமனும் இடைச் சிறுவர்களுடன் யமுனை யாற்றங்கரையில் ஆநிரைகளை மேய்த்துக் களைத்து ஒரிடத்தில் உட்கார்ந்திருந்தனர். இடைச் சிறுவர்களால் பசி தாங்க முடியவில்லை. அவர்கள் கண்ணனையும் பலராமனையும் தங்கட்கு உணவு ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகின்றனர். கண்ணன், அண்மையில் சில அந்தணர்கள் ‘ஆங்கிரஸ்’ என்ற வேள்வி இயற்றி வருகின்றனர் என்றும், அவர்களிடம் சென்று தங்கள் (கண்ணன், பலராமன்) பெயர்களைச் சொல்லி ‘நாங்கள் இன்னாரால் அனுப்பப்பட்டவர்கள் என்று கூறி உணவு கேளுங்கள்; உண்டு பசி தீருங்கள் என்றும் கட்டளையிட்டு அனுப்பினான். அவர்களும் அங்ஙனமே அந்தணர்கள் இருந்த இடம் சென்று தாங்கள் கண்ணன், பலராமன் ஆகியோர்களால் அனுப்பப்பெற்றவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு விநயத்துடன் விண்ணப்பம் செய்து உணவு வேண்டுகின்றனர். ஆயினும், அந்த அந்தணர்கள் இடைச் சிறுவர்களின்