பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 ◆ என் அமெரிக்கப் பயனம்



பேச்சைக் கேளாது ஒழியவே, ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். செய்தியைச் செப்புகின்றனர்.

கண்ணன் அவர்களிடம் “மீண்டும் செல்லுங்கள். என் பெயரையும் என் அண்ணன் பெயரையும் கூறி அந்தணர்களின் மனைவிமார்களை வேண்டுங்கள்” என்று சொல்லியனுப்பினான். அங்ஙனமே இடைச் சிறுவர்கள் சென்று தம்மைக் கிருட்டிணன், பலராமன் ஆகியோரால் அனுப்பப் பெற்றவர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டு தங்கட்குப் பசி தீரும்படி அமுது படைக்க வேண்டும் என்று வேண்டினர். அப்பெண்டிர்களும் கண்ணன் பெயரைக் கேட்டதற்கு மகிழ்ந்து உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன என்ற நால்வகை உணவுகளையும் நல்ல பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு கண்ணன், நம்பி மூத்தபிரான் ஆகியோர் இருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டனர்; தாய்மார், தந்தைமார், மக்கள், உடன் பிறந்தோர், கணவன்மார் இவர்கள் எவ்வளவு தடுத்துச் சொல்லியும் அதனைப் புறக்கணித்து விரைந்து வந்து யமுனையாற்றங்கரைக் கண்ணனையும் நம்பி மூத்தபிரானையும் சேவித்து தாங்கள் கொணர்ந்த அமுது வகைகளைச் சமர்ப்பித்து பரமானந்தபரர்களாய் மீண்டு சென்றனர். கண்ணபிரான் அமுது வகைகளை ஆயச் சிறுவர்கட்குத் தந்து தானும் அமுது செய்து மகிழ்ந்தான்.

(8) வெண்ணெய் உண்ட வாயன்: இவன்பற்றிய குறிப்பு ‘கொண்டல்வண்ணனை’ (அமலனாதி -10) என்று தொடங்கும் ஆழ்வார் பாடலில் ‘வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை’ என்று வருவது. இங்கு உரையாசிரியர்களின் விளக்கம் மிக அற்புதமாக அமைந்துள்ளது.

விளக்கம் இது கூரத்தாழ்வான் தம் சுந்தர பாஹ-ஸ்வத்தில் பண்டு யசோதைப் பிராட்டி கண்ணனுக்கு முத்தம் கொடுத்த சுவடு இன்றும் அழகர் (திருமாலிருஞ்சோலை எம்பெருமான்) திவ்விய கன்னங்களில் திகழா நிற்கும் என்று கூறி மகிழ்ந்து அனுபவித்தாற் போல, இந்த ஆழ்வாரும் பண்டு கண்ணன் வெண்ணெய் உண்ட முடை நாற்றம் இன்னும் பெரிய பெருமாள் (அரங்க நாதன்) திருப்பவளத்தில் கமழா நிற்கும் என்று சொல்லி அனுபவிக்கின்றார். தசரத சக்கரவர்த்தி நோன்பு நோற்றுப் பெருமாளை (இராமனை) மகனாகப் பெற்றதைப் போல நந்தகோபரும் “கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன்” என்றவாறு திருவாய்ப்பாடியில் பால் முதலிய செல்வம் அமுது செய்கைக்காக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளை கண்ணன். பெரிய பெருமாள் கொறுட்டை (உதட்டை) முகர்ந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் கமழா நிற்குமாம்.