பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 ◆ என் அமெரிக்கப் பயணம்


வில்லிதாசரின் திருமேனியைப் பிரம்மரதத்தில் எழுந்தருளப் பண்ணி அதனைத் தூக்கிக்கொண்டு செல்கின்றனர். பொன்னாச்சியார் இத்திருமொழியை அநுசந்திக்கத் தொடங்குகின்றார். முதற்பாசுரத்தை அநுசந்தித்து இரண்டாம் பாசுரம் அநுசந்திக்கும்போது முன்னே பிரம்ம ரதத்தைத் தூக்கிச் செல்பவர்கள் விரைந்து சென்றார்களாதலால் திருத்தேர் பொன்னாச்சாரியார் கட்புலனுக்கு மறைகின்றது. அதற்குத் தகுதியாக அவருடைய அநுசந்தானம்.

தேரும் போயிற்று; திசைகளும் மறைந்தன;
செய்வதொன் றறியேனே

என்று நிறைவு பெறுகின்றது. செய்வதொன்றறியேனே என்ற தொடர் மெல்லிய குரலில் திரும்பத் திரும்ப வெளிவந்து இறுதியில் நின்று விடுகின்றது. அப்போதே பொன்னாச்சாரியாரின் ஆவியும் போய் விடுகின்றது. இராமாநுசர் இருவர் திருமேனிகட்கும் ஈமச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்து விடுகின்றார். இச்செய்தியை அறியும் நம் உள்ளமும் துடிதுடித்து அடங்குகின்றது.

(16) திருக்கோட்டியூர் தெற்காழ்வான் - கோளரியாழ்வான் இவர்கள் பற்றிய விளக்கம் ‘என் செய்ய தாமரைக்கண்’ (திருவாய் 1.4 : 2) என்ற திருவாய் மொழிப் பாசுரத்தில் அமைகின்றது. இப்பாசுரத்தில் மூன்றாம் அடியில் வரும் ‘முழு வினையால்’ என்பதற்கு நம் பிள்ளை காட்டும் ஐதிகத்தைக் கூறுவேன். முழுவினை- பெரும்பாவம். பராசரபட்டர் ஒரு சமயம் திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருந்தார். அந்த ஊரில் தெற்காழ்வான், கோளரியாழ்வான் என்ற இருவர் வாழ்கின்றனர்.

இவர்களுள் கோளரியாழ்வான் தவறாமல் திருமண் தரித்த கோலமாய் வைதிகச் சடங்குகளை தவறாமல் செய்து வருபவன். தெற்காழ்வான் சாதாரணமாகக் காணப்பெறும் சாதாரண மனிதன். இருவரும் ஒரு சிறப்பான நன்னாளன்று ஒரு புண்ணிய தீர்த்தக் கரையில் சந்திக்க நேரிடுகின்றது. கோளரியாழ்வான் தெற்காழ்வானை நோக்கி ‘அப்பா தெற்கு, இன்று புண்ணிய தினம் ஆயிற்றே. இன்றாகிலும் ஒரு முழுக்கு போடலாகாதா?” என்கின்றான். அதற்கு அவன், “கோளரி, முழுக்கிட வேண்டுமென்று சொல்லும் உன் அபிப்பிராயம் என்னுடைய பாவங்கள் இந்த முழுக்கினால் சில தொலையக்கூடும் என்பது தானே. இது நிறைவேறக்கூடிய காரியமா? என்ன ? என்னுடைய பாவம் திருக்கோட்டியூரில் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தெற்காழ்வார் “திருக்கரத்தில் உள்ள திருவாழியால் போக்கினால் போகுமேயன்றி ஒன்றிரண்டு முழுக்குகளால் போகக் கூடியவையல்லவே’ என்கின்றான்.