பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை ◆ 159



விளக்காக இருக்கும். வேங்கடமேய விளக்கு (பெரி. திரு. 4.7 : 5) என்பது மங்கை மன்னன் வாக்கு அல்லவா ?

வரலாற்றைக் கூறுவேன். எம்பெருமானார் இத் திருவாய்மொழியை அருளிச் செய்யும்போது அந்தக் காலட்சேபக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான சீடர்கள் எழுந்தருளியிருந்தனர். அவர்களை நோக்கி “ஆழ்வார் பாரித்த குறை தீரத் திருவேங்கடமுடையான் எழுந்தருளியிருக்கும் இடத்திலே தங்கி நித்திய கைங்கரியம் பண்ண விருப்பமுடையார் ஆரேனும் உண்டா?” என்று வினவுகின்றார். குளிர் அருவி வேங்கடமாக இருப்பதனால் எல்லோரும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லித்தங்கள் இயலாமையைத் தெரிவிக்கின்றனர். அனந்தாழ்வான் எழுந்து “அடியேனுக்கு அப்பணிநியமித்தருள வேண்டும்” என்று வேண்டினார்.இதனைக் கேட்டு உகந்த எம்பெருமானார் நீர் ஒருவரே ஆண் பிள்ளை” என்று மிகவும் கொண்டாடித் தழுவிக் கொண்டார். அது முதலாக அப்பெருமகன் அனந்தாண் பிள்ளை என்று வழங்கப் பெற்றார்.

இராமாதுசருடைய சீடரான இவர் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். இவர் திருமலைக்குச் சென்று அங்கு ஒர் ஏரியை வெட்டி அதற்கு இராமாநுசர் புத்தேரி என்ற பெயரை அமைத்தவர். அருகில் ஒரு நந்தவனத்தை உண்டாக்கி அதிலிருந்து மலர்களைப் பறித்து திருவேங்கடமுடையானுக்கு மலர்க் கைங்கரியம் செய்து கொண்டு வந்தவர். ஒருநாள் மலர் கொய்கையில் நல்ல பாம்பு ஒன்று இவர் கையிலே தீண்டியது. அதனைப் பொருட்படுத்தாது, பரிகாரம் ஒன்றும் செய்யாமல் மீண்டு தீர்த்தமாடி பின்னர் சென்றும் மலர்கொய்து மாலைதொடுத்து திருவேங்கடமுடையானைச் சேவிக்கச் சென்றார். இந்நிலையில் இறைவன் அர்ச்சகர்மீது ஆவேசித்து “நஞ்சு தீர்க்காமல் இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று வினவியருள இவரும் “கடியுண்ட பாம்பு வலிதாகி இருந்ததனால் திருக்கோனேரியில் தீர்த்தமாடித் திருவேங்கடமுடையானைச் சேவிக்கின்றேன். கடித்த பாம்பு வலிதாகில் விரஜையிலே தீர்த்தமாடிவைகுண்டநாதனைச் சேவிப்பேன் என்றிருந்தேன்” என்று மறுமொழி பகர்ந்த பரமயோகி. திருவாய்மொழிக்கு “ஏய்ந்த பெருங் கீர்த்தி” என்ற தனியனை அருளிச் செய்தவர்.

இன்று ஏரியின் அருகில் நூற்றுக்கணக்கான அடியார்கள் தங்கும் விடுதிகள் கட்டப் பெற்றுள்ளன. பெரும்பாலும் இவை இரட்டை விடுதிகள். திருக்கோயிலுக்கு அருகிலிருப்பதனால் முதியோர் இவற்றை விரும்புகின்றார்கள். அந்த விடுதிகள் Anantazhvan Tank Cottages (A.T.C) என்று வழங்கி வருகின்றன. பெரும்பாலும் நாங்கள் திருமலைக்குச் செல்லும்போது இங்கு தான் ஒதுக்கீடு செய்து கொள்வோம்.

(22) வங்கிபுரத்து நம்பி பெருமாளைச் சேவித்தல்: இது பற்றிய குறிப்பு ‘எங்கள் கண்முகப் பே’ (திருவாய் 9.2 : 8) என்ற திருவாய்மொழியில்,