பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 ◆ என் அமெரிக்கப் பயணம்



நிறுத்துவதென்பது பெரிய பிரச்சினை. அரை மணிநேரம் சுற்றியலைந்தும் இடம் கிடைக்கவில்லை. எங்களை (நான், என் மனைவி மருமகள் ஜார்ஜ் வாஷிங்க்டன் நினைவுச் சின்னம் இருக்கும் இடத்தில் இறக்கிவிட்டு சுமார் 2 கல் தொலைவில் காரை கட்டணம் தந்து நிறுத்திவிட்டு நடந்தேவந்து எங்களையடைந்தான் என் மகன்.

கம்பீரமாக 555 அடி உயரமுள்ள நினைவுச் சின்னத்திற்குச் சற்றுத் தொலைவில் மரநிழல்களில் பெற்றோர்களுடன் குழந்தைகளும் சிறுவர்களும் தின்பன தின்றும், கொரிப்பன கொரித்தும், குளிர்பானங்கள் பருகியும் உள்ள கூட்டங்கள் ஒரு பக்கம். ஆசிரியர்கள் நடத்திவரும் மாணாக்கர்களின் பெருங்கூட்டங்கள் மற்றொருபுறம்; சுற்றிப் பார்க்க பல்வேறு இடங்களிலிருந்து பயணிகளின் கட்டுக்கடங்காத கூட்டங்கள் எல்லாப் புறங்களிலும் எள்போட்டால் எள் விழாதவாறு நினைவுச் சின்னத்தைச் சுற்றி பல்வேறுவகைக் கூட்டங்கள் ஏராளம் ஏராளம். அன்று வெயிலும் கடுமை; அதைப் பொருட்படுத்தாது கும்மாளம் போடும் கூட்டங்கள். இவற்றைப் பார்த்து மருட்சியுடன் மகிழ்ந்திருக்கும் எங்களை என் மகன் வந்தடைந்ததும் சுற்றிப் பார்க்கும் திட்டத்தை எண்ணினோம். (படம் - 59, 60)

எங்கும் சுற்றிப் பார்க்கும் மக்களை ஏற்றிக்கொண்டு இயங்கிவரும் பயண ஊர்திகளைக் கண்டோம். நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே பயணச் சீட்டுகள் வழங்கும் அமைப்பும் இருந்தது. பயண்ச்சீட்டு 18 டாலர் 72 டாலர் செலுத்தி 4 சீட்டுகள் வாங்கிக்கொண்டு ஊர்தியில் ஏறிக்கொண்போம். இந்த ஊர்தி பார்க்கவேண்டிய இடங்கள்தோறும் நிற்கும். இறங்கிப் பார்க்க விரும்புபவர்கள் இறங்கிப் பார்க்கலாம். இவர்கள் பார்த்த பிறகு அடுத்து வரும் வண்டிகளில் ஏறிக்கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு இடத்தையும் இறங்கிப் பார்க்க விரும்பினால் அனைத்தையும் பார்த்து முடிக்க ஒரு வார காலம் ஆகும். நாங்கள் அன்றே திரும்ப வேண்டியிருப்பதால் வண்டியிலிருந்து பார்த்த வண்ணமே மனநிறைவு கொள்ளவேண்டிய நிலை. நாங்கள் பார்த்தவை அடியில் தரப்பெறுகின்றன.

(1) பணத்தாள்கள் அச்சிடும் இடம்: மும்பையில் நாசிக் அச்சகத்தில் நம்மூரில் வழங்கும் ரூபாய்த்தாள்கள் அச்சிடுவது போன்ற இடம் இது. இங்குதான் பல்வேறு மதிப்புள்ள டாலர் நாணயத்தாள்கள் அச்சிடப் பெறுகின்றன. உலோக வகை நாணயங்கள் பிறிதோர் இடத்தில் தயாரிக்கப் பெறலாம். என்று நினைக்கத் தோன்றுகின்றது.

இவ்விடத்தையடுத்து விவசாய சம்பந்தமான துறைகள் இயங்கும் கட்டடங்கள் இருந்தன. கம்பீரமானவை. அவற்றையும் பார்த்தோம்.