பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 ◆ என் அமெரிக்கப் பயணம்



வசந்த, கோடை காலங்களில் முற்பகல் 8 மணி முதல் நள்ளிரவு வரையிலும் திறந்திருக்கும். நினைவுச் சின்னத்தையொட்டி நாற்புறங்களிலும் சாய்வான பாதைகள் உள்ளன. நாம் தங்கியுள்ள இடத்தினின்றும் இவற்றின் மூலம் சின்னத்தை அடையலாம். கட்டணம் இல்லை. ஆனால் காலவரையறையைக் குறிப்பிட்டுநுழைவுச் சீட்டுகள் வழங்கப்பெறும்.நுழைவுச் சீட்டு பெற்றவர்கள் மட்டிலுமே சின்னத்தினுள் அனுமதிக்கப் பெறுவர்.

இவற்றையெல்லாம் ஊர்தியினின்றும் இறங்கிப் பார்த்தால் ஒரு வாரம் தங்க வேண்டும். இவற்றைத் தவிர தலைநகரில் பார்க்க வேண்டியவை பல உள்ளன. இவற்றையெல்லாம் விடாமல் பார்க்க வேண்டுமானால் மேலும் ஒருவாரம் தங்க வேண்டும்.

ஊர்தியில் இருந்துகொண்டு இவற்றையெல்லாம் பார்த்து முடிப்பதற்கு பிற்பகல் 4.30 மணி வரை ஆயிற்று. உடன் கொண்டுசென்ற பகல் உணவு கொள்ளக்கூட நேரமில்லை.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

-
குமரகுருபரர் - நீதிமொழி விளக்கம் 53

என்ற குமரகுருபரரின் பாடலை நினைத்துக்கொண்டோம். என் மகன் கார் நிறுத்தின இடத்திற்கு நடந்து சென்று காருடன் எங்களை அடைய அரை மணி நேரம் ஆயிற்று. 4.30 மணிக்குத் திரும்பினோம். வழியில் காரை நிறுத்தி 5 மணிக்கு பகலுணவு உண்டோம். மீண்டும் 7-30 மணிக்கு உணவு விடுதிகள் உள்ள ஒரிடத்தில் காரை நிறுத்தி காஃபி அருந்தினோம். கார் மணிக்கு 65 கல் வேகத்தில் வந்துகொண்டிருந்தது. 9 மணி சுமாருக்கு ஊரை நெருங்கிவிட்டோம். இரவு நேரம் போக்குவரத்து நெருக்கடி எங்கள் வண்டி சுமார் ஒரு மணி நேரம் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு வகையில் நெருக்கடியைச் சமாளித்துக்கொண்டு இரவு 10 மணிக்கு இல்லம் வந்தடைந்தோம். கொண்டுசென்ற ‘ஆற்றுணாவை’ இல்லத்தில்தான் உண்ண வேண்டியதாயிற்று.