பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74, மவுண்ட் ரோடு, கிண்டி, சென்னை - 600 032.

நா. மகாலிங்கம்,

பி.எஸ்.சி, எப்.ஐ.இ.

தலைவர்

சக்தி நிறுவனங்கள்

வழிபாடு

முதுபெரும் புலவராகிய பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்களை நான் பல்லாண்டுகளாக அறிவேன். தமது முதிர்ந்த தளர்ந்த அகவையிலும் அறிவுக்கருவூலங்களைத் தொடர்ந்து எழுதித் தமிழகத்துக்கு வழங்கி வருவதை நான் பெரிதும் பாராட்டுகிறேன். “பூசித்தும் வாசித்தும் போக்கினேன்போது’ என்னும் ஆழ்வார் திருமொழிக்கு அணிகலனாக திரு. ரெட்டியாரின் அறிவு வாழ்க்கை அமைந்துள்ளது. பேராசிரியர்களுக்குப் பேராசிரியராகிய திரு.சுப்பு ரெட்டியார் அருந்தமிழ்ப் புலமை, அறிவியல் நுணுக்கம், ஆராய்ச்சி வன்மை எனப் பல்வேறு தகுதிகளைக் கொண்டிருப்பதால், அரிய பெரிய கலைச் செல்வங்களைத் தமிழுக்கு வழங்க முடிகிறது.

திருப்பதியில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கி இன்றுவரை அத்துறை இனிது நடைபெற்று வருவதற்கு அடிப்படை கோலியவர் திரு.ரெட்டியார் அவர்களேயாவார். எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்’ என்று வள்ளலார் கருதியபடி புதுமை பூத்துக் குலுங்கும் அமெரிக்க நாடு சென்று திரும்பிய நிலையில், தன் கண்ணையும், கருத்தையும் கவர்ந்த அமெரிக்கக் காட்சிகளை அருவி நடையில் அழகு ததும்ப ஆசிரியர் இந்நூலில் எழுதியுள்ளார்.அமெரிக்க நாட்டு வரலாற்றுக் குறிப்பும், மாநிலங்களின் பட்டியலும் காட்டியதோடு அமெரிக்க நாட்டில் உள்ள, தமிழ் மக்கள் கட்டிய அமெரிக்கத் திருக்கோயில்கள், காட்சிச் சாலைகள், பூங்காக்கள், நயாகரா அருவி முதலியவற்றையும் இந்நூலில் விவரித்துள்ளார். திருக்கோயிலுக்குள் நுழைந்ததுமே பாசுரங்களும், தத்துவக் கோட்பாடுகளும் ஆசிரியர் மனத்தில் பொங்கி வழிந்ததையும் கட்டுரையில் காணலாம்.

நாளுக்குநாள் மாற்றமும் முன்னேற்றமும் கொண்டு, உலகப் பொருளாதாரத்தின் ஊற்றுக்கண்ணாக அமெரிக்க நாடு விளங்குகிறது.