பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் இல்லத்திலும், 12 நாட்கள் டெக்ஸாஸ் மாநிலத்தில், டாலஸ்ஸில் என் பேத்தி மிருணாளினி இல்லத்திலும் தங்கியிருந்தேன். அக்காலங்களில் அவர்கள் கூட்டிச் சென்று காட்டிய இடங்களில் கண்டு களித்து அநுபவித்த செய்திகளும் நான் கற்றுக்கொண்டு தமிழகத்திலுள்ள என் உறவினர்கள், நண்பர்கள், அறிஞர்கள் ஆகியோருக்குக் கூறவேண்டிய செய்திகளும் இந்தப் பயண நூலில் பதிவாகியுள்ளன. சுருக்கமாகக் கூறினால் வளர்ந்துவரும் நாட்டிலுள்ள ஒருவன் வளர்ந்த உச்சநிலையில் உள்ள (இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இருக்கும்) நாட்டைப் பற்றிய செய்திகள் இந்நூலில் பதிவாகியுள்ளன எனலாம்.

இவற்றையே சுவையாகவும் படிப்போர் அதிசயிக்கத்தக்க நிலையிலும் சொல்லி வைக்கலாம். அல்லாவுதீனும் அற்புத விளக்கும் என்ற கற்பனைக் கதையை நாம் எல்லோரும் அறிவோம். அதில் பூதம் ஒன்று சிறுவன் அல்லாவுதீனை பல்வேறு இடங்களுக்கு கூட்டிச்சென்று பல்வேறு வியத்தகு செயல்களையும் காட்சிகளையும் காட்டி மகிழ்வித்ததை நினைவு கூரலாம்.

நியுயார்க் விமான நிலையத்தில் இறங்கியதும் என் மகன் டாக்டர் இராமகிருஷ்ணன், மருமகள், பேரன்மார்கள் இருவர் எங்களைத் தம் காரில் அழைத்துச் சென்றபோதே புதியதோர் உலகம் புகுந்ததை உணர்ந்தேன். பூதம் சிறுவன் அல்லாவுதீனை கற்பனை உலகத்திற்கு கூட்டிச் சென்றபோது அச்சிறுவனுக்கு ஏற்பட்ட உணர்வு எனக்கு ஏற்பட்டதாகக் கொள்ளலாம்.

அதன்பிறகு நியுயார்க் நகரிலிருந்தபோது என் மகன் பல இடங்கட்கு கூட்டிச் சென்றபோதும், டாலஸ்ஸில் தங்கியிருந்தபோது என் பேத்தி முதலியோர் பல இடங்கட்கு கூட்டிச்சென்றபோதும் நான் பெற்ற உணர்வுகள் பூதம் சிறுவன் அல்லாவுதீனுடன் பல இடங்களுக்கு சென்றபோது அவன் பெற்ற உணர்வுகளுடன் ஒப்பிடலாம். நான் பெற்ற உணர்வுகள் உண்மையான வியப்புணர்வுகள்; அவன் பெற்ற உணர்வுகள் கற்பனை வியப்புணர்வுகள்.

நான் இரண்டு இடங்களில் தங்கியிருந்தபோது நடைமுறையில் அவரவர்கள் வசதி-வாய்ப்புகளுக்கேற்ப பல இடங்களைச் சுற்றிப்பார்க்க நேர்ந்தாலும், செய்திகளைக் கோவைப்படுத்தி எழுதும்போது நியுயார்க் மாநிலம், ஃபிலடெல்ஃபியா மாநிலம் என்ற மாநிலங்கள் வாரியாகப் பிரித்துக் கொண்டும், மாநிலங்களில் பார்த்தவற்றை திருக்கோயில்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், கடைகள், உயிர்க்காட்சி சாலைகள் என்று