பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செய்திகளை வகைப்படுத்தியும் அமைத்துள்ளேன். ஆயினும் அவற்றில் புறப்பட்ட நாள், நேரம், திரும்பிய நேரம் முதலிய விவரங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

பல்வேறு துறைகளில் தரமான நூல்களை வெளியிட்டு சேவை செய்து வரும் சுரா வெளியீட்டகம் இந்த நூலின் கைப்படியையும் அன்புடன் ஏற்று அச்சிட வந்தமைக்கு அதன் அதிபர் திரு. வி.வீ.கே. சுப்புராசு அவர்கட்கு என் இதயங்கலந்த நன்றி. இது காலத்தால் செய்த உதவியாகும்.

சிறியேன் வரைந்த இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்த பொள்ளாச்சி வள்ளல் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களை அறியாதார் தமிழகத்தில் ஒருவரும் இலர். நாடறிந்த தொழிலதிபர். நற்காரியமாய் வாரி வழங்கும் வள்ளல். முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் திருப்பதியில் பணிபுரிந்தபோது திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு ‘இராமலிங்க வள்ளல் பொற்பதக்க’த்திற்கு கணிசமான தொகை வழங்கி பெருமைப்படுத்தியவர். வள்ளல் பெருமான் இராமலிங்கரின் கொள்கைகளை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் பரப்பிவரும் சிறப்பு இவருக்கு உரியது. இராமகிருஷ்ணருக்கு அவர் காலத்திலேயே விவேகாநந்தர் என்ற சீடர் கிடைத்து அவர் கொள்கைகளை உலகெங்கும் பரவக் காரணமாக அமைந்தது. வள்ளல் பெருமான் சோதியில் கலந்த பல ஆண்டுகட்குப் பிறகு அவர் சீடராக அமைந்த அவர்தம் கொள்கை உலகெங்கும் பரவக் காரணமாக அமைந்தது அருட்பெருஞ்சோதியின் திருவருளே என்பது என் கருத்து. கடல் கடந்து அமெரிக்கா போன்ற நாடுகள் சென்ற அநுபவமிக்க சத்துவகுணமே வடிவமான பொள்ளாச்சி வள்ளலின் அணிந்துரை பெற்றது. இந்நூலின் பேறு; என் பேறும் கூடத்தான். அணிந்துரை வழங்கி ஆசிகூறிய அன்பருக்கு என் இதயங்கலந்த நன்றி என்றும் உரியது.

இந்த நூலை அமெரிக்காவில் நன்முறையில் பொருளிட்டி நல்வாழ்க்கை வாழ்ந்து தமிழகத்திற்கு நற்பெயர் ஈட்டும் அமெரிக்கா வாழ் தமிழன்பர்கள் அனைவர்க்கும் அன்புப் படையலாக்கிப் பெருமிதம் கொள்ளுகின்றேன்.

இந்நூல் அச்சேறுங்கால் மூலப்படியுடன் பார்வைப் படிகளை ஒப்பிட்டுச் சரிபார்த்து உதவிய என் அபிமான புத்திரி டாக்டர் மு.ப. சியாமளாவுக்கு என் அன்பு கலந்த ஆசிகள் என்றும் உரியவை.