பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 ♦ என் அமெரிக்கப் பயணம்

நாடுகளையொட்டி இந்தியர்கள், அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், சீனர்கள் என்பன போன்ற பெயர்களால் வழங்கப் பெறுகின்றனர். சமயங்கள் தழுவிய மக்களிடையே பிறக்கும் போது சைவர்கள், வைணவர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் என்பன போன்ற பெயர்களாலும் வழங்கப் பெறுகின்றனர்.

ஏனைய உயிர்களின் வாழ்க்கையில் அதிக மாற்றம் இல்லை. அன்று போலவே இன்றும் இனம் பெருக்கி வாழ்கின்றன. உயிர்ப்பிராணிகள் அனைத்தும் கால்களால் நடந்தாலும், மனிதனைத்தவிர ஏனைய பிராணிகள் கால்களாலேயே நடந்து வருவதால் அவை ‘கால்நடைகள்’ என்ற பெயரால் வழங்கிவருகின்றன. ஆனால், ஆதியில் குதிரை, மாடு, எருமை, கோவேறு கழுதை முதலியவற்றையே மனிதன் வாகனங்களாகக் கொண்டிருந்தான். தான் வணங்கும் கடவுளர்கட்கும் (எ.கா: சிவன்-காளை திருமால்-கருடன்; எமன்-எருமை, பயிரவர்-நாய்; முருகன்-மயில்; விநாயகர்-மூஞ்சுறு) பறவைகளையும் மிருகங்களையும் வாகனங்களாக அமைத்தான். மனிதன் இன்று மிதிவண்டி, மாட்டுவண்டி, குதிரைவண்டி, மகிழ்வுந்து, சிற்றுந்து, பேருந்து, விமானம், இராக்கெட்டு, விண்வெளிக்கலன் போன்றவற்றை வாகனங்களாகக் கொண்டு வாழ்கின்றான். ஆதியில் குடிசையில் வாழ்ந்த மனிதன் இன்று மச்சுவீடு, மாடிவீடு (அமெரிக்காவில் மரப்பலகையாலான வீடு), கோடையில் குளிர் வசதியும், குளிர் காலங்களில் வெப்ப வசதியும் கொண்ட வீடுகள் அமைத்துக் கொண்டு வாழ்கின்றான். தான் வணங்கும் கடவுளர்கட்கும் செங்கலாலான, கருங்கல்லாலான மாளிகை போன்ற பெரிய கோயில்களை (எ.கா: மதுரை-மீனாட்சி கோயில், திருஅரங்கம்-அரங்கநாதர் கோயில், தில்லை-சிற்றம்பலவன் கோயில், இராமேசுவரம்-இராமநாதர் கோயில்) எழுப்பியுள்ளான்.

தன் அநுபவங்களையெல்லாம் கணிதம், பொறியியல், பலதுறை அறிவியல், பொருளியல், வரலாற்றியல்களாகச் சேமித்து வைத்துள்ளான். இவற்றைக் கற்போரின் வாழ்க்கை முறைகள் மாறுகின்றன. பல இலக்கிய ஆசிரியர்கள் பல்வேறு இலக்கியங்களைப் படைத்துள்ளனர். அருளாளர்கள் தோன்றி பல பக்திப் பனுவல்கள், தத்துவ நூல்கள் முதலியவற்றைப் படைத்துள்ளனர். இவற்றைக் கற்றலால் பல்வேறு நம்பிக்கைகள் தோன்றி மனிதனது வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றன.இவற்றுள் முக்கியமானவை வினை பற்றிய கொள்கைகள்,

பண்டைய (சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய புறநானூறு,

நீர்வழிப் படுஉம் புணைபோல்

முறைவழிப் படூஉம் ஆருயிர்

- புறம் 192