பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தோரண வாயில் ♦ 73


என்று வினையைப் பேசும், 88 அகவையைத் தாண்டும் நிலையிலுள்ள என்னை, மேலுலகம் சேரவேண்டிய நிலையிலுள்ள என்னை, மேல் நாடாகிய அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வரச் செய்தது ஊழே (நுகர்வினைபிராரப்தம்) தான் என்பதை இத்தொடர் சிந்திக்க வைக்கின்றது. என் நீண்டகால வாழ்க்கையில் நடைபெற்ற நல்லவையும் தீயவையுமாகிய அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த ஊழின் பயனே என்பதை நன்கு உணர்கின்றேன். நான் செய்பவை அனைத்தும் இறைவன் செயலே என்பதையும், நான் ஒரு செயற்படும் கருவியே என்பதையும் உணர்ந்து செயற்படுவதால் அனைத்தும் நல்லவையாகவே முடிகின்றன. ‘இருவினையொப்பு’ என்ற மனநிலை என்னை நெறிப்படுத்துகின்றது.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லர் படுவ தெவன்?

- குறள் 379


என்ற குறள் கலங்கரை விளக்காக அமைந்து எனக்கு வழிகாட்டும் ஒளியாகும். இலக்கியங்களிலும் வினைக்கொள்கை அதிகமாக வற்புறுத்தப் பெறுவதால், இக்கொள்கை நம் மனத்தில் ஆழப்பதிந்து நமக்கு அதில் உறுதி ஏற்படுகின்றது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதை விளக்க எழுந்தது சிலப்பதிகாரம். ‘நாடாண்ட தசரதனை வானாள வைத்ததும்’, ‘நாடாள வேண்டிய இராமனைக் காடாளச் செய்ததும்’, வினையின் பயனேயாகும் என்பதை வற்புறுத்துவது இராமாயணம்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

- குறள் 620


என்ற குறள் என்னை ‘விடாமுயற்சியில்’ ஈடுபடச் செய்யும் ஒளிவிளக்கு. ‘பெருமை முயற்சி தரும்’ (குறள்-61) என்ற தொடர் பக்க ஒளி காட்டும் பண்பாட்டு மொழி. இத்தகைய பல்வேறு உண்மைகளை என் அமெரிக்கப் பயணம் சிந்திக்கச் செய்கிறது. இந்தச் சிந்தனைகளின் ஒளியில் ‘என் அமெரிக்கப் பயணம்’ என்ற இந்த நூல் உருவாகின்றது. இதனைப்படிக்கும் அன்பர்கள் என்னுடன் சேர்ந்து உணர்ந்து நோக்கி என்னை வாழ்த்த வேண்டும் என்பது என் விருப்பம், விண்ணப்பமும் கூட