பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. பொதுச் செய்திகள்

மனிதனுக்கு உலகில் பல்வேறு வசதிகள் தேவைப்படுகின்றன. சமூக வாழ்வில் மனிதன் சிலவற்றைத் தானாக அமைத்துக் கொள்கின்றான். சிலவற்றைச் சமூக அமைப்புகளும், அரசும் இணைந்து உதவுகின்றன. இத்தகைய சில செய்திகளை இந்த இயலில் குறிப்பிடுகின்றேன்.

1. வீடுகள்: உயிருள்ள பிராணிகளை வைணவ தத்துவம் ‘சித்து’ என்று வகைப்படுத்திப் பேசும், சைவசித்தாந்தம் பசு’ என்று பகரும் கரையான் புற்று கட்டும்; ஆயினும் அது அதில் வாழ்வதில்லை; அதில் பாம்புகள் வாழும். காக்கை, குருவிகள் மரச்சுள்ளிகளைக் கொண்டு கூடுகள் கட்டி வாழும்; இடம் மாறினால் இக் கூடுகளைத் துறந்து புதிய இடத்தில் கூடுகளைக் கட்டிக்கொள்ளும். தூக்கனாங் குருவிகள் புல்லைக் கொண்டு அற்புதமான கூடுகட்டிக் கொள்ளும். தேனீக்கள் கட்டிக் கொள்ளும் கூட்டின் விசித்திரத்தையோ சொல்லிமுடியாது. இக்கருத்தையெல்லாம் ஒருவாறு

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால்-யாம்
பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்

எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது
- ஒளவையார்.

என்ற வெண்பா அற்புதமாக, சுருக்கமாகக் கூறுகிறது. சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகியவை குகைகளிலும் மலை இடுக்குகளிலும் ஒடுங்கி வாழ்கின்றன. மனிதனின் மூதாதையான குரங்குகளுக்கு குடிசை கூட போட்டுக்கொண்டு வாழத் தெரியவில்லை!

மனிதன் மட்டும் இறைவனால் அருளப் பெற்ற பகுத்தறிவினால் குடிசையில் தொடங்கி பல்வேறு விதமான இல்லமைப்புகளைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டு வாழ்கின்றான். கட்டட அமைப்புகளைச் சிந்தித்துப் படங்கள் வரைந்து திட்டங்களை வகுத்தல்,[1] இல்லங்களைக் கட்டுவதில் பல்வேறு பொறியமைப்பு[2] முறைகள், வீடுகளைக் கோடையில் தண்மையாகச் செய்வதிலும், குளிர் காலங்களில் வெப்பமாகச் செய்வதிலும் முறைகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளான். இராவணன் ஐம்பெரும் பூதங்களை அடக்கியாண்டது போல மனிதன் தான் கண்டறிந்த மின்னாற்றலின் துணை கொண்டு பல்வேறு முறைகளை புத்தம் புதியவாறெல்லாம் அமைத்துக் கொண்டு வருகின்றான்.


  1. Architecture
  2. Engineering