பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொதுச் செய்திகள் ♦ 5


அமெரிக்கா முழுவதிலும் வீடுகளைப் பலகைகளாலேயே அமைக்கின்றனர். வீட்டின் வெளிப்புறங்களை மெல்லிய செங்கலை ஒட்டி வடிவ அழகு செய்கின்றனர்; இது ஒரு வகையில் தீயினின்றும் பாதுகாப்பாகவும் அமைகின்றது. இக்காரணத்தாலேயே சாளரங்களும் கண்ணாடியினாலேயே அமைக்கப் பெறுகின்றன. தரை கெட்டியான பஞ்சமைப்பாலான தடித்த விரிப்பினால் மூடப் பெறுகின்றது. சமையலறையிலும் குளியலறையிலும் குழாய் அமைப்புகள் பொருத்தப் பெற்றுள்ள அமைப்பு[1] பீங்கானாலானது; தரையில் தண்ணீர் ஒழுக்கு ஏற்படாமலிருக்க மெல்லிய கடினமான பிளாஸ்டிக் தகட்டினால் மூடப் பெறுகின்றது. குளிக்கும் பகுதி குளிப்பதற்கேற்றவாறு விசாலமான பீங்கான் அமைப்பாலானது; வெந்நீரும் தண்ணீரும் இருபக்கக் குழாயில் சேர்ந்தே வருமாறு அமைந்துள்ளது; கழிப்பறையும் இவ்வமைப்பு கொண்டவையே. தளங்களில் தண்ணீர் ஒழுக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது மிகவும் இன்றியமையாதது. நல்ல கெட்டியான பூச்சுகளைக் கொண்டு சுவர் அழகு செய்யப் பெறுகின்றது. குளிர்காலத்தில் பனிக்கட்டி தங்காமல் இருக்க கூரையைக் கூம்பாக அமைக்கின்றனர். குளிர்காலத்தில் வெப்பமாக இருக்கவும், கோடைகாலத்தில் தண்மையாக இருக்கவும் மின்சார அமைப்புகள் உள்ளன. மூன்றடுக்கு வீடுகள் வரை வீடுகளில் இம்முறை கையாளப் பெறுகின்றது.

மூன்றடுக்குக்குமேல் எழுப்பப் பெறும் கட்டடங்கள் அனைத்தும் செங்கல்சுண்ணாம்பு, செங்கல்-சீமைக்காரை கொண்டு அமைக்கப் பெறுகின்றன. தரைகளில் பல்வேறு வகைப் பளிங்குகள், வழுவழுப்பான மெல்லிய கருங்கற்கள் பயன்படுத்தப் பெறுகின்றன. 110 அடுக்குகள் வரை இத்தகைய கட்டடங்கள் அமைகின்றன. கட்டட மேல் மட்டத்தில் குளிர்காலங்களில் சில அடிகள் கனம் வரை பனிக் கரைதங்கி, தானாக உருகி வழிகின்றது.

பறவை இனங்களுக்குக் கூடுகட்டுவதற்கு தாவரச் சுள்ளிகள் பயன்படுவது போல், மனிதர்கட்குத் தாவரப் பலகைகள் பயன்படுகின்றன என்பதை நினைத்து பார்த்து வியப்படைகின்றோம். இடம் இருப்பின் பெரும்பாலான வீடுகளின் முன்புறம் அழகான தோட்டங்கள் அமைத்து அதன் பராமரிப்பில் மிக்கக் கவனம் செலுத்தப் பெறுகின்றது. குளிர் காலத்தில் அழியும் செடிவகைகட்குப் பதிலாக, கோடையிலும் வசந்தகாலத்திலும் புதிய செடிகள் வைக்கப் பெறுகின்றன. பல இடங்களில் செடிவகை விற்பனை நிலையங்கள் காணப் பெறுகின்றன.

இந்த வீட்டின் வசதி அமைப்புகளைப் பற்றிச் சில செய்திகளை ஈண்டு தருவேன்.


  1. Basin